செய்திகள்

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா.. 7-ம் நாள் மகா ரத தேரோட்டம் கோலாகலம்!

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா.. 7-ம் நாள் மகா ரத தேரோட்டம் கோலாகலம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்று வரும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் 7-ம் நாளான இன்று மகா ரத தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என பக்தி முழக்கமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.

10 நாட்கள் நடைபெறும் கார்த்திகை தீப பிரம்மோற்சவம் கடந்த நவம்பர் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் ஒவ்வொரு நாளும் அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மன் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

நேற்று 6-ம் நாள் விழாவில் 63 நாயன்மார்கள் ஊர்வலமும், வெள்ளி ரத உற்சவமும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று 7-ம் நாள் விழாவின் முக்கிய நிகழ்வான மகா ரத தேரோட்டம் நடைபெறுகிறது.

அண்ணாமலையார் பெரிய தேரிலும், உண்ணாமுலை அம்மன் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் தனித்தனி தேர்களிலும் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் வலம் வருகின்றனர். தேரோட்டத்தை காண தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர்.

விழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் நவம்பர் 24-ம் தேதி அதிகாலை 4 மணிக்கும், மகா தீபம் அன்று மாலை 6 மணிக்கும் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட உள்ளது. இதனை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.