செய்திகள்

இடிக்கப்படுகிறதா ரஜினியின் ராகவேந்திரா மண்டபம்?

இடிக்கப்படுகிறதா ரஜினியின் ராகவேந்திரா மண்டபம்?

சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட முக்கிய தகவல்!

சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக திகழ்ந்து வந்த இடங்களில், கோடம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீராகவேந்திரா திருமண மண்டபத்திற்கும் தனி இடம் உண்டு. குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு இந்த மண்டபம் மிகவும் நெருக்கமானது.

ரஜினிகாந்த் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திப்பது, ரசிகர் மன்றப் பணிகள் குறித்து ஆலோசிப்பது உள்ளிட்ட பல முக்கிய நிகழ்வுகள் இந்த மண்டபத்தில் நடைபெற்றுள்ளன. இதனால், பல ஆண்டுகளாக ரஜினிகாந்த் ரசிகர்களின் நினைவுகளோடு இந்த மண்டபமும் இணைந்துள்ளது.

இந்நிலையில், சுமார் 36 ஆண்டுகளாக ரஜினிகாந்த் குடும்பத்துடன் பயணித்து வந்த ராகவேந்திரா திருமண மண்டபம் இடிக்கப்பட உள்ளதாகவும், அதன் இடத்தில் நட்சத்திர ஹோட்டல் அமைக்கப்பட உள்ளதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்தின் மகளும், தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அவர் தயாரித்துள்ள புதிய வெப் சீரிஸ் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் இந்த கேள்வி முன்வைக்கப்பட்டது.

அப்போது பேசிய சௌந்தர்யா ரஜினிகாந்த், ராகவேந்திரா திருமண மண்டபம் சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்று என்றும், கடந்த 36 ஆண்டுகளாக தங்கள் குடும்பத்துடன் பயணித்து வந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும், ஒரு காலகட்டம் முடிவடையும் போது அடுத்த கட்டத்திற்குச் செல்ல வேண்டும் என்றும், காலத்துக்கு ஏற்ப மாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதும் தனது தந்தை ரஜினிகாந்தின் எண்ணம் என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்து, “ராகவேந்திரா திருமண மண்டபத்தின் பயணம் முடிந்துவிட்டது. அடுத்து என்ன செய்வது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது” என சௌந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் ராகவேந்திரா திருமண மண்டபத்தின் தற்போதைய நிலை குறித்த தகவல்களுக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். அதே நேரத்தில், மண்டபத்தின் எதிர்காலம் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.

1990-களில் உருவாக்கப்பட்ட இந்த மண்டபம், ரஜினிகாந்தின் ரசிகர் சந்திப்புகள் மட்டுமின்றி, ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஆலோசனைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்வுகளுக்கும் சாட்சியாக இருந்துள்ளது.

பல ஆண்டுகளாக ரஜினிகாந்த் ரசிகர்களின் நினைவுகளுடன் பயணித்த ராகவேந்திரா திருமண மண்டபத்தின் ஒரு காலகட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ள நிலையில், அடுத்ததாக அந்த இடத்தில் என்ன அமையப்போகிறது என்பது குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *