இயக்குநராக களமிறங்கிய ஜேசன் சஞ்சய்.. ‘சிக்மா’ படத்துக்கு கிடைத்த வரவேற்பு!
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் இன்று (அக்.2) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, ராஜூ சுந்தரம், சம்பத் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. தமன் இசையமைத்துள்ளார்.
ஹெய்ஸ்ட் ஆக்ஷன் காமெடி பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் கதை ரூ.500 கோடி மதிப்பிலான போதைப்பொருள் மற்றும் சூதாட்ட பின்னணியை மையமாகக் கொண்டதாக கூறப்படுகிறது. சந்தீப் கிஷன் வித்தியாசமான சூழலில் சிக்கிக்கொள்ளும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஜேசன் சஞ்சய்க்கு இது முதல் திரைப்படம் என்பதால், படம் குறித்த எதிர்பார்ப்பு தொடக்கம் முதலே அதிகமாக இருந்தது. குறிப்பாக, பிரபல நடிகரின் மகன் என்ற அடையாளத்தைத் தாண்டி, ஒரு இயக்குநராக அவர் எப்படி கதை சொல்லியிருக்கிறார் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

படம் வெளியானதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளியாகும் ஆரம்பகட்ட ரசிகர் கருத்துகளில் சந்தீப் கிஷனின் நடிப்பு, ஆக்ஷன் காட்சிகள் மற்றும் தமனின் இசைக்கு பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. அதே நேரத்தில், படத்தின் முதல் பாதி மற்றும் ஜேசன் சஞ்சயின் இயக்கம் குறித்து கருத்துகள் கலவையாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே, ஜேசன் சஞ்சய் தனது முதல் படத்தை ரசிகர்களுடன் இணைந்து சென்னையில் திரையரங்கில் பார்த்துள்ளார். அவரது தாய் மற்றும் சகோதரியும் முதல் நாள் காட்சிக்கு வந்திருந்தனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன.
தனது தந்தை விஜய் படத்தைப் பார்த்த பிறகு தனது கருத்தை தெரிவிக்க சிறிது நேரம் எடுத்துக்கொள்வார் என்றும், அவர் ‘சிக்மா’ படத்தை ரசித்து தனது முயற்சிக்காக பெருமைப்படுவார் என நம்புவதாகவும் ஜேசன் சஞ்சய் முன்பு தெரிவித்திருந்தார்.
மொத்தத்தில், ஜேசன் சஞ்சயின் முதல் படமான ‘சிக்மா’வுக்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான ஆரம்பகட்ட விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. முழுமையான விமர்சனங்கள் மற்றும் திரையரங்கு வரவேற்பு தொடர்ந்து வெளியாகும் நிலையில், இந்தப் படம் ஜேசன் சஞ்சயின் இயக்குநர் பயணத்தில் முதல் படியாக அமைந்துள்ளது.
