விஜயை வரவேற்க திரண்ட மக்கள்.. மதுராந்தகத்தில் பரபரப்பான சாலை வலம்!
மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து விஜய் இன்று சாலை வலம் மேற்கொண்டார்.
மாமண்டூர் பகுதியில் தொடங்கிய இந்த சாலை வலம், சுமார் 45 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெறுகிறது. மாமண்டூர் முதல் மதுராந்தகம் வரை சுமார் 35 இடங்கள் வழியாக விஜய் பிரசார வாகனத்தில் சென்று பொதுமக்களை சந்தித்து வருகிறார்.
விஜய் சென்ற வழித்தடத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரண்டு வரவேற்பு அளித்தனர். சில இடங்களில் பொதுமக்கள் மலர்களைத் தூவி விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரசார வாகனத்தில் வேட்பாளர் மரகதம் குமரவேலுடன் நின்றபடி விஜய் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். புக்கத்துறை, படாளம், ஜானகிபுரம், கருங்குழி, மோச்சேரி, தண்டலம், பெரும்பாக்கம், எலப்பாக்கம், சோத்துப்பாக்கம், மேல்மருவத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வழியாக இந்த சாலை வலம் செல்கிறது.
இதனிடையே, சாலை வலத்தின்போது மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்திற்கும் விஜய் சென்று வழிபாடு மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பிரசாரம் அக்டோபர் 4ஆம் தேதி மாலையுடன் நிறைவடைகிறது. இதனால் இரு தொகுதிகளிலும் இறுதிக்கட்ட பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விஜயின் சாலை வலம் நடைபெறும் பகுதிகளில் 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
