தங்க மோதிரம் கேட்டு தகராறு.. செவிலியர் மீது மண்வெட்டியால் தாக்குதல்!
தமிழக அரசு சார்பில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தத் திட்டத்தில் மோதிரம் வழங்குவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் செவிலியர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள முழையூர் பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அப்பகுதியில் பிறந்த குழந்தைக்கு ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ வழங்கப்படவில்லை எனக் கூறி, மதன் என்பவர் கிராம சுகாதார செவிலியர் அலமேலுவிடம் கேட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு, பிறந்த தேதி மற்றும் தகுதி உள்ளிட்ட விதிமுறைகளின் அடிப்படையில் முன்னுரிமை வரிசைப்படி மோதிரம் வழங்கப்படும் என செவிலியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மதன், மதுபோதையில் செவிலியர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தகராறில் ஈடுபட்டதாகவும், பின்னர் மண்வெட்டியால் தாக்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலில் செவிலியர் அலமேலு மற்றும் அவரது குடும்பத்தினர் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடையும்போது, அவற்றை செயல்படுத்தும் பணியில் இருக்கும் மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பும் முக்கியமானதாக உள்ளது. திட்டத்தின் விதிமுறைகள் குறித்து உரிய விளக்கம் பெற்று, அதிகாரப்பூர்வ நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதே இதுபோன்ற சம்பவங்கள் சொல்லும் முக்கிய செய்தியாக உள்ளது.
