சென்னையின் வானிலை கண்காணிப்பில் அதிரடி அப்டேட்.. புதிய ரேடார் எப்போது?
சென்னை துறைமுகத்தில் உள்ள S-band டாப்ளர் ரேடார் கடந்த 2002-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ள இந்த ரேடாரில், குறிப்பாக அதன் ஆன்டெனா மற்றும் இயந்திர பாகங்களில் தேய்மானம் உள்ளிட்ட தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் இதனை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தற்போது பழைய ரேடார் மீண்டும் செயல்பாட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், புதிய ரேடார் நிறுவப்படும் வரை இதனை பயன்படுத்த முடியும் என்றும் IMD தெரிவித்துள்ளது. இதற்கான புதிய ரேடாருக்கான ஆர்டர் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மேலும் 4 புதிய ரேடார்கள்!
சென்னையில் மட்டுமல்லாமல், தமிழகத்தின் உள்பகுதிகளில் வானிலை கண்காணிப்பை வலுப்படுத்த மேலும் 4 புதிய டாப்ளர் வானிலை ரேடார்கள் அமைக்கப்பட உள்ளன.
அவை:
- ஏற்காடு
- திருச்சி
- கன்னியாகுமரி
- ராமநாதபுரம்
ஆகிய இடங்களில் அமைக்கப்பட உள்ளதாக IMD தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மழை, புயல் மற்றும் பிற தீவிர வானிலை நிகழ்வுகளை கண்காணிக்கும் திறன் மேலும் அதிகரிக்கும்.
ரேடார் எதற்கெல்லாம் உதவும்?
டாப்ளர் வானிலை ரேடார் மூலம் மழை பெய்யும் மேகங்களின் நகர்வு, மழையின் அளவு, காற்றின் வேகம் மற்றும் திசை, மேக வளர்ச்சி உள்ளிட்ட தகவல்களை கண்காணிக்க முடியும். குறிப்பாக புயல் மற்றும் கனமழை போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளை கண்காணிப்பதில் இந்த ரேடார்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
சென்னை துறைமுக ரேடாரின் கண்காணிப்பு வரம்பு சுமார் 500 கி.மீ. என்பதால், சென்னை மட்டுமின்றி தமிழ்நாடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உருவாகும் பெரிய வானிலை அமைப்புகளைக் கண்காணிக்க இது முக்கியமானதாக உள்ளது.
மேலும், சென்னையில் பள்ளிக்கரணை NIOT வளாகத்தில் சுமார் 150 கி.மீ. வரம்பைக் கொண்ட X-band ரேடாரும் செயல்பட்டு வருகிறது. சென்னை துறைமுக ரேடார் புதியதாக மாற்றப்படும் நிலையில், இந்த வானிலை கண்காணிப்பு கட்டமைப்பு மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் குறிப்பாக வடகிழக்கு பருவமழை மற்றும் புயல் காலங்களில் முன்னெச்சரிக்கை தகவல்களை இன்னும் சிறப்பாக வழங்கவும், பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளைத் திட்டமிடவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
