செய்திகள்

பிறப்பு விகிதம் சரிவு.. இளைஞர்களுக்காக டேட்டிங் ஆப் தொடங்கிய சிங்கப்பூர் அரசு!

பிறப்பு விகிதம் சரிவு.. இளைஞர்களுக்காக டேட்டிங் ஆப் தொடங்கிய சிங்கப்பூர் அரசு!

உலகின் பல நாடுகளில் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், சிங்கப்பூர் அரசு இளைஞர்களுக்காக புதிய டேட்டிங் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘FirstDate’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சேவை, தற்போது 21 முதல் 35 வயதுக்குட்பட்ட அரசு ஊழியர்களுக்கான பைலட் திட்டமாக செயல்படுத்தப்படுகிறது.

வழக்கமான டேட்டிங் செயலிகளைப் போல பலரது சுயவிவரங்களை தொடர்ந்து ஸ்வைப் செய்து கொண்டிருக்க வேண்டிய அவசியம் இதில் இல்லை. பயனர்கள் தங்களது விருப்பங்கள், பழக்கவழக்கங்கள், மதிப்புகள் மற்றும் வாழ்க்கை குறித்த எதிர்பார்ப்புகள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். அதன் அடிப்படையில், ஒருவருக்கு ஒரே நேரத்தில் ஒரு பொருத்தமான நபரை மட்டுமே இந்த அமைப்பு பரிந்துரைக்கும்.

இந்த சேவையில் Singpass மூலம் பயனர்களின் அடையாளம் சரிபார்க்கப்படுகிறது. இருவருக்கும் பொருத்தம் ஏற்படுத்தப்பட்ட பிறகு, அந்த இணைப்பை ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்பதை முடிவு செய்ய 72 மணி நேரம் அவகாசம் வழங்கப்படுகிறது. இருவரும் சம்மதித்தால் மட்டுமே அடுத்தகட்ட தொடர்பு ஏற்படுத்தப்படும். மேலும், உரையாடலை தொடங்குவதற்கு உதவும் வகையில் ‘Date Quests’ எனப்படும் செயல்பாடுகளும் பரிந்துரைக்கப்படுகின்றன.

சிங்கப்பூரில் பிறப்பு விகிதம் வரலாறு காணாத அளவுக்கு குறைந்துள்ளது. 2025-ம் ஆண்டில் அந்நாட்டின் குடியிருப்பாளர்களுக்கான மொத்த கருவுறுதல் விகிதம் 0.87 ஆக இருந்தது; 2024-ல் இது 0.97 ஆக இருந்தது. மேலும், இளைஞர்கள் தாமதமாக திருமணம் செய்வதும் இந்த மக்கள் தொகை சவாலுக்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

இதன் பின்னணியில், இளைஞர்கள் ஒருவரையொருவர் அறிந்து கொண்டு அர்த்தமுள்ள உறவுகளை உருவாக்குவதற்கு உதவும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், FirstDate சேவையின் அதிகாரப்பூர்வ நோக்கம் நேரடியாக பிறப்பு விகிதத்தை உயர்த்துவது என்று குறிப்பிடப்படவில்லை; இளைஞர்களின் டேட்டிங் பயணத்திற்கு ஆதரவளிப்பதே இதன் முதன்மை நோக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *