ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு விருந்து.. முதலமைச்சர் விஜய் கௌரவிக்கிறார்!
ஜப்பானில் நடைபெற்ற 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஏராளமான பதக்கங்களை வென்றனர். குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களும் தடகளம், ஸ்குவாஷ் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பதக்கங்களை வென்று மாநிலத்திற்கு பெருமை சேர்த்தனர்.
இந்த நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கலந்து கொண்டு, வீரர்களின் சாதனைகளை பாராட்டினார்.

விழாவில் பேசிய அமைச்சர், சர்வதேச அளவில் தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த வீரர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் உயரிய ஊக்கத்தொகை மற்றும் சிறப்பு நிதி உதவிகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், விளையாட்டு வீரர்களின் பயிற்சி மற்றும் வசதிகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.

இதனிடையே, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் விஜய் விரைவில் விருந்து அளித்து கௌரவிக்க உள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார். இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், விளையாட்டு மாணவர்களுக்கான விடுதிகளில் ஏசி வசதி ஏற்படுத்துவது மற்றும் தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் விளையாட்டு விடுதிகள் அமைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராமப்புறங்கள் மற்றும் மாவட்ட அளவில் திறமையான விளையாட்டு வீரர்களை கண்டறிந்து, அவர்களுக்கு தேவையான பயிற்சி மற்றும் வசதிகளை வழங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி ஆசிய விளையாட்டுப் போட்டியில் 85 பதக்கங்களுடன் 4-வது இடத்தை பிடித்த நிலையில், தமிழக வீரர்களின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது. அவர்களை கவுரவிக்கும் வகையில் நடைபெற உள்ள முதலமைச்சரின் விருந்து, வீரர்களுக்கு மேலும் ஊக்கமளிக்கும் நிகழ்வாக இருக்கும்.
