மாதவரம் ஆவின் பால் பண்ணையில் முதலமைச்சர் விஜய் ஆய்வு..!
சென்னை மாதவரத்தில் உள்ள ஆவின் மத்திய பால் பண்ணையில் முதலமைச்சர் விஜய் இன்று (அக்.7) ஆய்வு மேற்கொண்டார். அப்போது பால் கொள்முதல், பதப்படுத்துதல் மற்றும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.
மாதவரம் ஆவின் பால் பண்ணையில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு தினசரி பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இங்கு நாள்தோறும் சுமார் 3 லட்சம் முதல் 3.60 லட்சம் லிட்டர் வரை பால் பதப்படுத்தப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
இதனிடையே, ரூ.2.23 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஆவின் மத்திய ஆய்வகத்தின் துணைக் கட்டடத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார். பால் மற்றும் பால் பொருட்களின் தரத்தை நவீன கருவிகள் மூலம் துல்லியமாக பரிசோதிக்கும் வகையில் இந்த ஆய்வக வசதி அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், மாதவரம் ஆவின் வளாகத்தில் சுமார் ரூ.152 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய பால் பண்ணையின் கட்டுமானப் பணிகளையும் முதலமைச்சர் விஜய் பார்வையிட்டார். புதிய பண்ணை மூலம் பால் பதப்படுத்தும் திறன் மேலும் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட பகுதிகளில் ஆவின் பால் விநியோகம் தொடர்பாக சமீபத்தில் புகார்கள் எழுந்துள்ள நிலையில், முதலமைச்சரின் இந்த ஆய்வு முக்கியத்துவம் பெற்றுள்ளது. பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி ஆவின் பால் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் அதிகாரிகளிடம் அவர் அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
