திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் புதிய கட்டுப்பாடு.. அபிஷேக பக்தர்களுக்கு மருத்துவ பரிசோதனை!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கருவறையில் நடைபெறும் மூலவர் அபிஷேகத்தை காண வரும் பக்தர்களுக்கு புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கருவறைக்குள் பக்தர்கள் செல்லும்போது சிலருக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அபிஷேகத்திற்காக முன்பதிவு செய்து வரும் பக்தர்கள், விருப்பம் இருந்தால் அபிஷேகத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக கோவிலுக்குள் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமில் உடற்தகுதி பரிசோதனை செய்து கொள்ளலாம். இந்த நடைமுறை அக்டோபர் 7-ம் தேதி முதல் செயல்படுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கருவறை அபிஷேகத்தை காண பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் ஆன்லைன் முன்பதிவும் இருக்காது. வழக்கம்போல் சுவாமி மற்றும் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறும்.
கருவறையில் அபிஷேகத்தை காணும் பக்தர்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ORS கரைசல் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வயது முதிர்ந்த பக்தர்களை அபிஷேக நேரத்தில் கடைசியாக அமர வைக்கவும் கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த புதிய நடைமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
