60 ஆண்டுகளுக்குப் பிறகு ராணுவ மரண தண்டனை.. முன்னாள் மேஜர் நிதால் ஹசனுக்கு ட்ரம்ப் உத்தரவு!
அமெரிக்காவில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ராணுவ மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. 2009-ம் ஆண்டு டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள Fort Hood ராணுவ தளத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேரை கொன்ற முன்னாள் அமெரிக்க ராணுவ மேஜரும், ராணுவ மனநல மருத்துவருமான நிதால் மாலிக் ஹசனுக்கு மரண தண்டனை நிறைவேற்ற அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.
2009 நவம்பர் மாதம் Fort Hood-ல் ராணுவ வீரர்கள் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டிருந்த கட்டிடத்திற்குள் நுழைந்த ஹசன் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டது. இந்த தாக்குதலில் 13 பேர் உயிரிழந்ததுடன், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 2013-ம் ஆண்டு ராணுவ நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.
இந்த நிலையில், பாதுகாப்புத்துறை செயலாளர் பீட் ஹெக்செத் பரிந்துரையின் அடிப்படையில், ஹசனுக்கு துப்பாக்கிப் படையினர் மூலம் (firing squad) மரண தண்டனை நிறைவேற்ற ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். தற்போது இந்த தண்டனை 2026 டிசம்பர் 3-ம் தேதி Fort Hood-ல் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
அமெரிக்க ராணுவத்தில் கடைசியாக 1961-ம் ஆண்டில்தான் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. எனவே, ஹசனின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால், 60 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு அமெரிக்க ராணுவத்தில் நடைபெறும் முதல் மரண தண்டனையாக இது அமையும். மேலும், ராணுவத்தில் துப்பாக்கிப் படையினர் மூலம் கடைசியாக 1945-ம் ஆண்டில்தான் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், ட்ரம்பின் ஒப்புதல் கிடைத்துவிட்டதால் உடனடியாக தண்டனை நிறைவேற்றப்படும் என்று கூற முடியாது. ஹசன் அமெரிக்க சிவில் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் வாய்ப்பு உள்ளது. அவ்வாறு சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்தால், திட்டமிடப்பட்ட தேதியும் தாமதமாகலாம்.
