மிஷன் ரூமி ட்வின் 2026.. விண்ணில் வெற்றிகரமாகப் பாய்ந்த RRR-1 ராக்கெட்!
தமிழகத்தின் திருவிடந்தையில் நடைபெற்ற ‘மிஷன் ரூமி ட்வின் – 2026’ திட்டத்தின் கீழ், RRR-1 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. விண்வெளி ஆராய்ச்சி மற்றும் ராக்கெட் தொழில்நுட்ப மேம்பாட்டில் புதிய முயற்சியாக அமைந்துள்ள இந்த நிகழ்வு, மாணவர்களிடையே விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை வளர்க்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்டது.
திருவிடந்தையில் நடைபெற்ற ராக்கெட் ஏவுதல் நிகழ்வு!
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள திருவிடந்தையில், SPACE ZONE இந்தியா நிறுவனம், மார்டின் குழுமம் மற்றும் அமெரிக்காவின் Global Help International Foundation ஆகியவை இணைந்து இந்த ராக்கெட் ஏவுதல் நிகழ்வை நடத்தின. இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம், ஒரே நேரத்தில் இரண்டு ராக்கெட்டுகளை ஏவி, ‘ரீ-ஸ்டார்ட், ரீ-இக்னிஷன்’ (Re-start, Re-ignition) தொழில்நுட்பத்தைச் சோதிப்பதாகும்.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக RRR-1 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்தச் சோதனையின் மூலம் கிடைக்கும் தரவுகள், எதிர்கால விண்வெளி ஆராய்ச்சிக்கும் ராக்கெட் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கும் உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் பங்கேற்பு.. முக்கியப் பிரமுகர்கள் வருகை!
இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு ராக்கெட் ஏவுதலைத் தொடங்கி வைத்தார். திட்டத்தை மார்டின் குழும நிர்வாக இயக்குநரும் புதுச்சேரி காமராஜ் நகர் சட்டமன்ற உறுப்பினருமான ஜோஸ் சார்லஸ் மார்டின், மார்டின் குழும இயக்குநரும் லால்குடி சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் லீமா ரோஸ் மார்டின் மற்றும் Global Help International Foundation தலைமைச் செயல் அதிகாரி நீமு மூர்த்தி ஆகியோர் தலைமையில் செயல்படுத்தினர்.

மேலும், SPACE ZONE நிறுவனத்தைச் சேர்ந்த ஆனந்த் மேகலிங்கம், ‘இந்தியாவின் மூன் மேன்’ என அழைக்கப்படும் பத்மஸ்ரீ டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை, முன்னாள் இலங்கை ஆளுநர் செந்தில் தொண்டமான், புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். முன்னாள் DRDO விஞ்ஞானிகள், அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.
மாணவர்களிடம் விண்வெளி ஆர்வத்தை வளர்க்கும் முயற்சி!
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விண்வெளி அறிவியல் மற்றும் ராக்கெட் தொழில்நுட்பம் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தி, அவர்களை எதிர்காலத் தொழில்நுட்பப் படைப்பாளர்களாக உருவாக்குவதே ‘மிஷன் ரூமி ட்வின் – 2026’ திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்தத் திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் தொழில்நுட்பச் சோதனைகள், மாணவர்களுக்கு நடைமுறை அறிவைப் பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதுடன், இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சித் துறையின் மீதான ஆர்வத்தையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
