பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்திற்கு புதிய வழி.. சென்னையில் ஓட்டுநர் பயிற்சித் திட்டம்!
சென்னையில் பெண்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில், பெருநகர சென்னை மாநகராட்சி புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது. இதற்காக, பெண்களுக்கு வணிக வாகனங்களை இயக்குவதற்கான ஓட்டுநர் பயிற்சி வழங்க அசாத் அறக்கட்டளையுடன் (Azad Foundation) சென்னை மாநகராட்சி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
ரிப்பன் கட்டடத்தில் நடைபெற்ற இந்த ஒப்பந்த நிகழ்வின் மூலம், பெண்களுக்கு இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை வணிக நோக்கில் இயக்குவதற்கான பயிற்சிகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், பெண்கள் தொழில்முறை ஓட்டுநர்களாகவும், போக்குவரத்துத் துறை சார்ந்த பணிகளிலும் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதே முக்கிய நோக்கமாகும்.
குறிப்பாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய சமூகப் பின்னணியைச் சேர்ந்த பெண்களுக்கு முன்னுரிமை அளித்து, அவர்களுக்குத் திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்த இந்த முயற்சி உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெண்கள் போக்குவரத்துத் துறையில் பணியாற்றும்போது எதிர்கொள்ளும் தடைகளைக் குறைத்து, பாதுகாப்பான மற்றும் கண்ணியமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும் இத்திட்டத்தின் நோக்கங்களில் ஒன்றாகும்.
சென்னை மாநகராட்சியின் பாலினம் மற்றும் கொள்கை ஆய்வகத்தின் ஆதரவுடன் இந்த முயற்சி முன்னெடுக்கப்படுகிறது. நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன் மற்றும் அசாத் அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தொழில்முறை ஓட்டுநர் பயிற்சி மூலம் பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை மேம்படுத்துவதுடன், போக்குவரத்துத் துறையில் பெண்களின் பங்களிப்பையும் அதிகரிக்க இந்த முயற்சி வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
