“வாழ்க்கை எப்போதும் உங்களைத் தோல்வியடைந்தவர்னு சொல்லாது.. ‘ஒன் மோர்’ முயற்சி பண்ணுங்க!” – மாணவர்களுக்கு சூர்யா அறிவுரை!
சென்னையில் நடைபெற்ற ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழாவில் நடிகர் சூர்யா கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பேசினார். அகரம் அறக்கட்டளையின் 20 ஆண்டுகாலப் பயணம், முதல் தலைமுறை மாணவர்களின் கல்வி முன்னேற்றம், விடாமுயற்சி மற்றும் வாழ்க்கையில் வெற்றிபெறத் தேவையான மனப்பான்மை குறித்து தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

20 ஆண்டுகளில் 7,000 குடும்பங்களைச் சென்றடைந்த அகரம்!
அகரம் அறக்கட்டளை தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், முதல் தலைமுறை மாணவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 7,000 பேரைச் சென்றடைய முடிந்துள்ளதாக சூர்யா தெரிவித்தார். அகரம் தொடங்கப்பட்டதன் நோக்கம் இன்றுவரை குறையாமல் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், இதற்குப் பல வழிகாட்டிகளும் ஆதரவாளர்களும் உறுதுணையாக இருப்பதாகவும் கூறினார்.

2006-ஆம் ஆண்டு முதல் தலைமுறை மாணவர்கள் குறித்துக் கேட்கப்பட்ட ஒரு கேள்வியை நினைவுகூர்ந்த சூர்யா, 2026-ஆம் ஆண்டிலும் அத்தகைய மாணவர்கள் கல்வி பயில்வதற்கான உதவியைத் தேவைப்படுவதாகக் குறிப்பிட்டார். மலைக் கிராமங்கள், கடலோரப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் கல்வி வாய்ப்புகள் குறைவாக இருப்பதையும், குறிப்பாகப் பல மாணவிகள் கல்வியை இடையில் நிறுத்தும் சூழல் இருப்பதையும் சுட்டிக்காட்டினார். அவர்களைத் தேடிச் சென்று கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதே அகரத்தின் முக்கிய நோக்கம் என்றும் தெரிவித்தார்.
“வாழ்க்கை உங்களைத் தோல்வியடைந்தவர்னு சொல்லாது!”
தனது சினிமா அனுபவத்தை உதாரணமாகக் கூறிய சூர்யா, ஒரு காட்சியைச் சிறப்பாக எடுப்பதற்காகப் பலமுறை ரீடேக் எடுப்பதாக விளக்கினார். ஒவ்வொரு முறையும் தவறு ஏற்படும்போது இயக்குநர் தோல்வியடைந்துவிட்டதாகக் கூறாமல், மீண்டும் முயற்சி செய்யும் வாய்ப்பை வழங்குவார் என்றார்.

“வாழ்க்கை எப்போதுமே உங்களை ஃபெயில்னு சொல்லாது. நீங்கதான் அப்படி நினைச்சுக்கலாம். வாழ்க்கைக்கிட்ட எப்போதும் ‘இன்னொரு வாட்டி பண்ணப் போறேன், ஒன் மோர்’னு சொல்லுங்க” என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
தேர்வில் மதிப்பெண் பெறுவது, கல்லூரியில் இடம் கிடைப்பது அல்லது முதல் வேலையைப் பெறுவது என எதுவாக இருந்தாலும், எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை என்பதற்காக முயற்சியைக் கைவிடக் கூடாது என்றும், மீண்டும் முயற்சி செய்து முன்னேற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தொடர்ச்சியான பயிற்சிதான் திறமையை வளர்க்கும்!
ஒரு திரைப்படத்தை உருவாக்குவதற்கு முன்பு பலமுறை ஒத்திகை பார்க்கப்படுவதாகக் குறிப்பிட்ட சூர்யா, அந்தப் பயிற்சிகளுக்கு உடனடியாகப் பாராட்டுகள் கிடைக்காவிட்டாலும், அவைதான் ஒருவரைத் திறமையானவராக உருவாக்குகின்றன என்றார்.
கோடிங், ஓவியம், ஓட்டப்பயிற்சி என எந்தத் துறையாக இருந்தாலும், தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலம் திறமையை மேம்படுத்த முடியும் எனத் தெரிவித்தார். தான் சினிமாவுக்கு வந்தபோது நடிக்கத் தெரியவில்லை என்றும், தொடர்ந்து செய்த பயிற்சிகளே தனது 28 முதல் 29 ஆண்டுகாலத் திரைப்பயணத்தில் முன்னேற உதவியதாகவும் பகிர்ந்துகொண்டார்.
“வெற்றிக்குப் பின்னால் இருப்பவர்களை மறந்துடாதீங்க!”
ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது கதாநாயகனை மட்டும் சார்ந்தது அல்ல என்று கூறிய சூர்யா, இயக்குநர்கள், எழுத்தாளர்கள், உதவி இயக்குநர்கள், ஒப்பனைக் கலைஞர்கள், ஆடை வடிவமைப்பாளர்கள், ஓட்டுநர்கள், லைட்மேன்கள் உள்ளிட்ட பலரின் உழைப்பும் அதில் இருப்பதாக விளக்கினார்.
அதேபோல், வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைந்த பிறகு, அந்த இடத்தை அடைய உதவியவர்களை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது என்றார். நமக்குப் பின்னால் துணையாக நின்றவர்களை நினைவில் வைத்துக்கொள்வதுடன், நாமும் மற்றொருவரின் முன்னேற்றத்துக்கு உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
“என்னால் வர முடியும்னா, நீங்க ஆசைப்படுற எல்லா விஷயங்களிலும் உங்களாலும் வர முடியும்” என்ற சூர்யாவின் நம்பிக்கையூட்டும் வார்த்தைகள் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்தன.
