“ஆளுநர் அதிகாரம் திமுகவுக்கு இப்போது மட்டும் தெரியுதா?” – அன்பில் மகேஷ் வழக்கில் உயர் நீதிமன்றம் கேள்வி!
சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடர்பான வழக்கு விசாரணையின்போது, ஆளுநரின் அதிகாரம் குறித்து நீதிபதி எழுப்பிய கேள்விகள் கவனம் பெற்றுள்ளன.
கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் மற்றும் பல்வேறு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ.100 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. இந்தப் புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அன்பில் மகேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் தன் மீது வழக்குப் பதிவு செய்ய முடியாது என்று அன்பில் மகேஷ் தரப்பில் வாதிடப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதி, ஆளுநர் பதவியைத் திமுக முன்பு ஆட்டுக்குத் தாடியுடன் ஒப்பிட்டுப் பேசியதைச் சுட்டிக்காட்டி, “ஆளுநரின் அதிகாரம் பற்றி திமுக எப்போது பேச ஆரம்பித்தது?” எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும், அன்பில் மகேஷ் தரப்பில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்ய இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவின் விசாரணையை அக்டோபர் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை அக்டோபர் 29ஆம் தேதி நடைபெற உள்ளது.
