ரூ.35.79 கோடி சொத்துக்குவிப்பு வழக்கு – முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்!
வருமானத்திற்கு அதிகமாக ரூ.35.79 கோடி சொத்து சேர்த்ததாக எழுந்த புகார் தொடர்பாக, முன்னாள் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை (ED) மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
2016 முதல் 2021ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சி. விஜயபாஸ்கர். அந்தக் காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாக அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) கடந்த 2021ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கின் அடிப்படையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் அமலாக்கத்துறையும் தனியாக விசாரணையைத் தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக, கடந்த 2024ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே கடந்த நவம்பர் 6ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், விஜயபாஸ்கர் ஆஜராகவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, தற்போது மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, நவம்பர் 18ஆம் தேதி சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விஜயபாஸ்கர் ஆஜராக வேண்டும். அவரது மனைவி ரம்யா நவம்பர் 19ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் சொத்துகள் மற்றும் நிதிப் பரிவர்த்தனைகள் தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது
