செய்திகள்

இன்னும் 3 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடக்கம்.. தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

இன்னும் 3 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடக்கம்.. தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழக மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் வடகிழக்கு பருவமழை இன்னும் 3 நாட்களில் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, அக்டோபர் 15-ம் தேதி முதல் பருவமழை தொடங்குவதற்குச் சாதகமான சூழல் நிலவுகிறது.

மேலும், அடுத்த 2 முதல் 3 நாட்களில் தென்மேற்குப் பருவமழை முழுமையாக விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் அக்டோபர் 15-ம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, தெற்கு அந்தமான் கடல் பகுதியை ஒட்டிய வளிமண்டலச் சுழற்சி காரணமாக, அக்டோபர் 13-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், அக்டோபர் 13-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ளதால், மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிவிப்புகளைப் பொதுமக்கள் தொடர்ந்து கவனிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *