செய்திகள்

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ராஜேந்திர அர்லேகர் நியமனம்.. 6 மாநிலங்களில் ஆளுநர்கள் மாற்றம்!

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ராஜேந்திர அர்லேகர் நியமனம்.. 6 மாநிலங்களில் ஆளுநர்கள் மாற்றம்!

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமிக்கப்பட்டுள்ளார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன் மூலம், தமிழக ஆளுநர் பொறுப்பை அவர் முழுமையாக ஏற்க உள்ளார்.

கேரள மாநில ஆளுநராகப் பணியாற்றி வந்த ராஜேந்திர அர்லேகர், தமிழக ஆளுநரின் கூடுதல் பொறுப்பையும் கவனித்து வந்தார். தற்போது அவர் தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரங்களில் கவனத்தைப் பெற்றுள்ளது.

இதற்கிடையே, நாட்டின் மேலும் ஐந்து மாநிலங்களிலும் ஆளுநர் நியமனம் மற்றும் இடமாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, சிக்கிம் மாநில ஆளுநராக இருந்த ஓம் பிரகாஷ் மாத்தூர் கேரள மாநிலத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். ஒடிசா மாநில ஆளுநராக பிரஜ் மோகன் ராம் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், கர்நாடக மாநில ஆளுநராக டாக்டர் சுதா யாதவ், உத்தரகாண்ட் மாநில ஆளுநராக டால் சிங் பிசென், சிக்கிம் மாநில ஆளுநராக துஷ்யந்த் கௌதம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்கள் மூலம் மொத்தம் ஆறு மாநிலங்களில் ஆளுநர் நியமனம் மற்றும் இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புதிய பொறுப்புகளுக்கான நியமனங்கள், சம்பந்தப்பட்ட ஆளுநர்கள் பொறுப்பேற்கும் நாளிலிருந்து நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஆளுநர் பதவி மாநில அரசின் நிர்வாகம் மற்றும் சட்டப்பேரவை நடவடிக்கைகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக, மாநில அரசு நிறைவேற்றும் மசோதாக்கள், பல்கலைக்கழகங்கள் தொடர்பான விவகாரங்கள் உள்ளிட்டவற்றில் ஆளுநரின் பங்கு தொடர்ந்து அரசியல் விவாதங்களுக்கு உள்ளாகி வருகிறது.

இந்தச் சூழலில், ராஜேந்திர அர்லேகர் தமிழகத்தின் முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இனிவரும் காலங்களில் தமிழக அரசுக்கும் ஆளுநர் மாளிகைக்கும் இடையிலான நிர்வாக உறவு எவ்வாறு அமையும் என்பது கவனிக்கப்படும் ஒன்றாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *