செய்திகள்

தமிழகத்தின் 203 கோயில்களுக்கு 11.27 லட்சம் ஆன்மிகப் புத்தகங்கள்! அறநிலையத்துறை அதிரடி நடவடிக்கை!

தமிழகத்தின் 203 கோயில்களுக்கு 11.27 லட்சம் ஆன்மிகப் புத்தகங்கள்! அறநிலையத்துறை அதிரடி நடவடிக்கை!

தமிழகம் முழுவதும் உள்ள 203 கோயில்களில் செயல்படும் ஆன்மிகப் புத்தக விற்பனை நிலையங்களுக்கு 11.27 லட்சம் ஆன்மிகப் புத்தகங்களை விநியோகம் செய்ய இந்து சமய அறநிலையத்துறை ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. இதற்கான டெண்டர் நடவடிக்கைகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

மொத்தம் 493 தலைப்புகளில் 11,27,500 புத்தகங்கள் விநியோகத்திற்குத் தயாராக உள்ளன. இவற்றின் மொத்த எடை 182 டன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தகங்கள் சென்னை கீழ்ப்பாக்கம், ராயப்பேட்டை மற்றும் அகத்தீஸ்வரர் கோயில் திருமண மண்டபம் ஆகிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தின் கீழ் 162 சைவக் கோயில்களும், 41 வைணவக் கோயில்களும் இடம்பெற்றுள்ளன. சென்னை கபாலீஸ்வரர் கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில், ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் உள்ளிட்ட முக்கியக் கோயில்களுக்கும் புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன.

இந்தப் புத்தகங்களை விநியோகிப்பதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை அக்டோபர் 30ஆம் தேதி மாலை 3 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெண்டரில் பங்கேற்பவர்களுக்கு ரூ.1 லட்சம் முன்வைப்புத்தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், புத்தகங்களை வாகனங்களில் ஏற்றிய நாளிலிருந்து 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட கோயில்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும். விநியோகத்தின் போது புத்தகங்கள் சேதமடைந்தாலோ அல்லது எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டாலோ அதற்கான தொகை ஒப்பந்ததாரரிடமிருந்து வசூலிக்கப்படும். கோயில்களிடம் விநியோகக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

கோயில்களின் ஆன்மிகப் புத்தக விற்பனை நிலையங்கள் வாயிலாக பக்தர்கள் ஆன்மிக நூல்களை எளிதாகப் பெறுவதற்கு இந்த நடவடிக்கை உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெண்டர் தொடர்பான முழு விவரங்களையும் தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ ஒப்பந்தப்புள்ளி இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *