பணியின்போது உ*ரிழந்த காவலர்கள் குடும்பங்களுக்கு ரூ.5.96 கோடி காப்பீடு! முதல்வர் விஜய் வழங்கினார்!
காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு, பணியின்போது உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு ரூ.5.96 கோடி மதிப்பிலான தனிநபர் விபத்துக் காப்பீட்டுத் தொகைக்கான ஆணைகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வழங்கியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்புப் படைக் காவலர்கள் உயிரிழந்தனர். அவர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் இந்த நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இன்று சென்னையில் உள்ள காவல்துறை தலைமை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற காவலர் வீரவணக்க நாள் நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் பங்கேற்றார். அங்குள்ள காவலர் நினைவுச் சின்னத்தின் முன்பாக மலர்வளையம் வைத்து, பணியின்போது உயிர்த்தியாகம் செய்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து, தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றி, பணியின்போது உயிரிழந்த 6 காவலர்களின் குடும்பங்களுக்கும், கோமா நிலையில் உள்ள ஒரு காவலரின் குடும்பத்திற்கும் நிதியுதவி வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் சம்பளத் தொகுப்புத் திட்டத்தின் கீழ், மொத்தம் 7 காவலர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 கோடியே 96 லட்சம் மதிப்பிலான தனிநபர் விபத்துக் காப்பீட்டுத் தொகைக்கான ஆணைகளை முதலமைச்சர் விஜய் வழங்கினார்.
காவல்துறையினர் தங்களது கடமையின்போது எதிர்கொள்ளும் சவால்களையும், பொதுமக்களின் பாதுகாப்பிற்காக அவர்கள் ஆற்றும் அர்ப்பணிப்பையும் நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. பணியின்போது உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்தக் காப்பீட்டுத் தொகை அவர்களுக்கு உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
