நயன்தாராவுக்கு 60 அடி உயர கட் அவுட்! இந்திய சினிமாவில் இதுவே முதல் முறையா?
நடிகை நயன்தாராவுக்கு சென்னையை அடுத்த பூந்தமல்லியில் 60 அடி உயரத்தில் பிரம்மாண்ட கட் அவுட் அமைக்கப்பட்டுள்ளது. அவர் அம்மன் வேடத்தில் நடித்துள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தை முன்னிட்டு இந்தக் கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. ஒரு நடிகைக்காக இவ்வளவு உயரத்தில் கட் அவுட் அமைக்கப்பட்டுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, தற்போது ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். 2005ஆம் ஆண்டு வெளியான ‘ஐயா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம்
கடந்த 2020ஆம் ஆண்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதன் இரண்டாம் பாகத்தை இயக்குநர் சுந்தர்.சி இயக்கியுள்ளார். முதல் பாகத்தை இயக்கிய ஆர்.ஜே. பாலாஜி, இரண்டாம் பாகத்தில் இயக்குநராகப் பணியாற்றவில்லை.

இந்தப் படத்தில் நயன்தாராவுடன் ரெஜினா கசாண்ட்ரா, ஊர்வசி, யோகி பாபு, அபிநயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் படத்தைத் தயாரித்துள்ளது. ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.
தீபாவளிக்கு வெளியாகும் படம்
‘ரைஸ் ஆஃப் மகாசக்தி’ என்ற பெயரில் வெளியான படத்தின் டீசர் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் நவம்பர் 6, 2026 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பூந்தமல்லி செம்பரம்பாக்கத்தில் உள்ள வேல்ஸ் திரையரங்கில் நயன்தாராவுக்காக அமைக்கப்பட்டுள்ள 60 அடி உயரக் கட் அவுட் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. படத்தின் வெளியீட்டுக்கு முன்பே இந்தப் பிரம்மாண்ட ஏற்பாடு பேசுபொருளாகியுள்ளது.
