செய்திகள்

நாளை உத்தரபிரதேசம், ஒடிசா செல்லும் பிரதமர் மோடி! என்னென்ன நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்?

நாளை உத்தரபிரதேசம், ஒடிசா செல்லும் பிரதமர் மோடி! என்னென்ன நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்?

பிரதமர் நரேந்திர மோடி நாளை (அக்டோபர் 25) உத்தரபிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தப் பயணத்தின்போது புதிய தொழிற்சாலை திறப்பு, விமானப்படையின் சாகச நிகழ்ச்சிகளைப் பார்வையிடுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். மேலும், ரிசர்வ் வங்கியின் புதிய டேட்டா சென்டர் மற்றும் சைபர் பாதுகாப்புப் பயிற்சி மையத்தையும் திறந்து வைக்க உள்ளார்.

உத்தரபிரதேசத்தில் நிகழ்ச்சிகள்

முதலில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசிக்குச் செல்லும் பிரதமர் மோடி, காலை 11 மணியளவில் அர்விந்த் நிறுவனத்தின் புதிய ஆயத்த ஆடைகள் உற்பத்தித் தொழிற்சாலையைத் திறந்து வைக்கிறார். இந்தத் தொழிற்சாலை மூலம் குறிப்பாகப் பெண்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தித் துறையை மேம்படுத்துவதிலும் இந்தத் திட்டம் முக்கியப் பங்கு வகிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, பிற்பகல் 1 மணியளவில் வாரணாசியில் உள்ள நமோ காட் பகுதியில் நடைபெறும் இந்திய விமானப்படையின் வான்வழி சாகச நிகழ்ச்சியைப் பிரதமர் பார்வையிடுகிறார். இந்திய விமானப்படையின் 94-வது ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் தேஜஸ், ரஃபேல், சுகோய் உள்ளிட்ட போர் விமானங்களின் சாகசங்கள் இடம்பெற உள்ளன.

ஒடிசாவில் டேட்டா சென்டர் திறப்பு

உத்தரபிரதேச நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு ஒடிசா மாநிலம் புவனேஷ்வருக்குச் செல்லும் பிரதமர், மாலை 4.45 மணியளவில் இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய டேட்டா சென்டர் மற்றும் சைபர் பாதுகாப்புப் பயிற்சி மையத்தைத் திறந்து வைக்கிறார்.

இந்த டேட்டா சென்டர், வங்கியின் முக்கியமான பணப்பரிவர்த்தனை மற்றும் நிதிச் சேவைகளுக்கான தொழில்நுட்பக் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சைபர் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் பயிற்சி மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்கும் புதிய மையம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னர் பிரதமர் மோடி டெல்லிக்குத் திரும்ப உள்ளார்.