சென்னையில் பயோ மைனிங் திட்டம்: 118 ஏக்கர் நிலம் மீட்பு!

சென்னையில் பயோ மைனிங் திட்டம்: 118 ஏக்கர் நிலம் மீட்பு!

சென்னையில் பல ஆண்டுகளாகக் குவிந்துள்ள பழைய குப்பைகளை அகற்றி நிலத்தை மீட்டெடுக்கும் வகையில், மாநகராட்சி சார்பில் பயோ மைனிங் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கொடுங்கையூர், பெருங்குடி மற்றும் அத்திப்பட்டு ஆகிய குப்பைக் கொட்டும் வளாகங்களில் மேற்கொள்ளப்படும் இந்தப் பணிகள் மூலம் இதுவரை மொத்தம் 118 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது.

கொடுங்கையூரில் 350 ஏக்கர் பரப்பளவில் உள்ள குப்பைக் கிடங்கில், அகற்றப்பட வேண்டிய 66.52 லட்சம் டன் பழைய கழிவுகளில் சுமார் 47.86 லட்சம் டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் சுமார் 22 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. இப்பணிகள் 2027 மே மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெருங்குடியில் 250 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள குப்பைக் கிடங்கின் முதல் கட்டப் பணிகள் மூலம் சுமார் 96 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டத்தில் 5.50 லட்சம் டன் கழிவுகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் 2027 மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்திப்பட்டு குப்பைக் கிடங்கிலும் பழைய கழிவுகளை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும், கொடுங்கையூர் மற்றும் பெருங்குடியில் கூடுதல் கழிவுகளை அகற்ற புதிய திட்டங்களுக்கான ஒப்பந்தப் பணிகளும் தயாராகி வருகின்றன.

பழைய குப்பைகளை அகற்றுவதன் மூலம் நிலத்தை மீட்டெடுப்பதுடன், நகரின் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்துவதும் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.