ஆவின் பால் பொருட்களின் உற்பத்தி நிறுத்தப்படவில்லை – நிர்வாகம் விளக்கம்!
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவினில், 100-க்கும் மேற்பட்ட பால் பொருட்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களுக்கு ஆவின் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. நிறுவனத்தில் தயாரிக்கப்படும் எந்தவொரு பொருளின் உற்பத்தியும் முழுமையாக நிறுத்தப்படவில்லை என்றும், அனைத்து பொருட்களும் வழக்கம்போல் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுவதாகவும் விளக்கம் அளித்துள்ளது.
ஆவின் நிறுவனம் தினசரி சுமார் 34 லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்து, வெண்ணெய், நெய், தயிர், பனீர், பால் கோவா உள்ளிட்ட பல்வேறு பால் பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. நெய், வெண்ணெய், பனீர், குக்கீஸ் உள்ளிட்ட பொருட்கள் வழக்கம்போல் தயாரிக்கப்பட்டு, ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனை முகவர்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு இனிப்புகளும் தயாரிக்கப்பட்டு, வாடிக்கையாளர்கள் மற்றும் நிறுவனங்களின் தேவைக்கேற்ப விநியோகிக்கப்பட்டு வருவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், தயிர், லஸ்ஸி, பனீர் உள்ளிட்ட முக்கியப் பால் பொருட்களின் விற்பனை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
எனவே, ஆவின் பால் பொருட்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டதாக வெளியாகும் தகவல்களைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும், தேவைக்கேற்ப பொருட்களைத் தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
