செய்திகள்

கியூபா மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடை விவகாரம்! ஐ.நா. சபையில் அமெரிக்கா–கியூபா மோதல்

கியூபா மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடை விவகாரம்! ஐ.நா. சபையில் அமெரிக்கா–கியூபா மோதல்

கியூபா மீது அமெரிக்கா விதித்துள்ள நீண்டகாலப் பொருளாதாரத் தடையை முடிவுக்குக் கொண்டுவர வலியுறுத்தும் தீர்மானம் தொடர்பான விவாதத்தின்போது, ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் அமெரிக்கா மற்றும் கியூபா பிரதிநிதிகளுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற்ற விவாதம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

ஐ.நா. சபையில் அமெரிக்கத் தூதர் மைக் வால்ட்ஸ், கியூபா அரசின் செயல்பாடுகளை விமர்சித்துப் பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கியூபா வெளியுறவுத் துறை அமைச்சர் புருனோ ரோட்ரிக்ஸ், அமெரிக்கத் தூதரின் கருத்துகளை மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, ஐ.நா. அதிகாரிகள் தலையிட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். பின்னர் விவாதம் மீண்டும் தொடர்ந்தது.

கியூபா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடை 1960ஆம் ஆண்டு தொடங்கியது. இந்தத் தடையை முடிவுக்குக் கொண்டுவரக் கோரும் தீர்மானத்தை கியூபா, 1992ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஐ.நா. பொதுச்சபையில் முன்வைத்து வருகிறது. கடந்த 2025ஆம் ஆண்டு நடைபெற்ற வாக்கெடுப்பில், தீர்மானத்திற்கு ஆதரவாக 165 நாடுகளும் எதிராக 7 நாடுகளும் வாக்களித்தன. 12 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் விலகியிருந்தன.

இந்நிலையில், பொருளாதாரத் தடையை முடிவுக்குக் கொண்டுவரக் கோரும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு அக்டோபர் 28ஆம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தத் தீர்மானம் சட்டப்பூர்வமாகக் கட்டுப்படுத்தக்கூடியது அல்ல என்றாலும், சர்வதேச நாடுகளின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் முக்கியமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.