அறிவியல் ஆராய்ச்சிக்கு ரூ.24,000 கோடி முதலீடு! காப்புரிமை பதிவுகளும் அதிகரிப்பு – பிரதமர் மோடி
புதுடெல்லியில் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற்ற வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க மாநாடு (ESTIC 2026) நிகழ்ச்சியைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார். இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சி, உள்நாட்டுத் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் புத்தாக்கங்களை ஊக்குவிப்பதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் கடந்த ஓராண்டில் மத்திய அரசின் ரூ.12,000 கோடி முதலீட்டுக்கு இணையாகத் தனியார் துறையும் ரூ.12,000 கோடி முதலீடு செய்துள்ளதாகப் பிரதமர் தெரிவித்தார். இதன் மூலம் மொத்தம் ரூ.24,000 கோடி முதலீட்டுக்கான உறுதிப்பாடு உருவாகியுள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்தை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு தொடர்பான திட்டத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவில் ஆண்டுதோறும் தாக்கல் செய்யப்படும் காப்புரிமை விண்ணப்பங்களின் எண்ணிக்கை, பத்து ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 50,000 ஆக இருந்த நிலையில், கடந்த ஆண்டு சுமார் 1.5 லட்சமாக உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின் முன்னேற்றத்தை எடுத்துரைத்த பிரதமர், தமிழகத்தின் கல்பாக்கத்தில் அமைந்துள்ள 500 மெகாவாட் திறன் கொண்ட முன்மாதிரி விரைவு ஈனுலை (PFBR) முதல் அணுக்கருப் பிளவு தொடக்க நிலையான ‘First Criticality’-ஐ அடைந்ததையும் குறிப்பிட்டார். இது இந்தியாவின் அணுசக்தித் தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கியமான மைல்கல்லாகும்.
மேலும், செயற்கை நுண்ணறிவு வழங்கும் தகவல்களைச் சரிபார்ப்பது அவசியம் என்றும், அறிவியல் ஆராய்ச்சியில் சுயமாகச் சிந்திக்கும் திறனைப் பாதுகாக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். ஆராய்ச்சியின் பலன்கள் ஆய்வகங்களோடு நின்றுவிடாமல் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
