செய்திகள்

குண்டு துளைக்காத கண்ணாடிக்குள் ரசிகர்களை சந்தித்த அமிதாப் பச்சன்!

குண்டு துளைக்காத கண்ணாடிக்குள் ரசிகர்களை சந்தித்த அமிதாப் பச்சன்!

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், மும்பையில் உள்ள தனது வீட்டின் முன்பு ரசிகர்களைச் சந்தித்தபோது, குண்டு துளைக்காத கண்ணாடி பாதுகாப்புக் கவசத்திற்குள் நின்று ரசிகர்களைச் சந்தித்த சம்பவம் கவனம் பெற்றுள்ளது.

மும்பையின் ஜூஹு பகுதியில் உள்ள தனது ‘ஜல்சா’ (Jalsa) வீட்டின் முன்பு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அமிதாப் பச்சன் ரசிகர்களைச் சந்திப்பது வழக்கம். அந்த வகையில், நவம்பர் 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் ஏராளமான ரசிகர்கள் அவரது வீட்டின் முன்பு திரண்டனர். ஆனால், இந்த முறை வழக்கத்திற்கு மாறாக, சுமார் 12 அடி உயரம் கொண்ட குண்டு துளைக்காத கண்ணாடி பாதுகாப்புக் கூண்டிற்குள் நின்றபடி ரசிகர்களைச் சந்தித்தார்.

சமீபத்தில் நடிகர் டைகர் ஷெராஃப் கார் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் மற்றும் அமிதாப் பச்சனின் வீட்டைத் தாக்கப்போவதாக வந்த மிரட்டல் மின்னஞ்சல் ஆகியவற்றைத் தொடர்ந்து மும்பையில் பிரபலங்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அக்டோபர் 23ஆம் தேதி வந்த மிரட்டல் மின்னஞ்சலில் அமிதாப் பச்சனின் வீடும் குறிப்பிடப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சூழலில், அவரது பாதுகாப்பிற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், இந்தச் சந்திப்பின்போது அவரது மகன் அபிஷேக் பச்சனும் உடனிருந்து பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கண்காணித்தார்.

பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் தனது ஞாயிற்றுக்கிழமை ரசிகர்கள் சந்திப்பை, பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியிலும் அமிதாப் பச்சன் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.