ஆந்திர கடற்கரையில் கரை ஒதுங்கிய 9 தமிழக மீனவர்களின் உடல்கள்!
சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 9 தமிழக மீனவர்கள் மாயமான நிலையில், அவர்களின் உடல்கள் ஆந்திர மாநில கடற்கரைப் பகுதியில் கரை ஒதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த அக்டோபர் 29ஆம் தேதி காசிமேடு துறைமுகத்தில் இருந்து விசைப்படகில் 9 மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அவர்களில் காசிமேட்டைச் சேர்ந்த சூர்யா (49), குப்பன் (48), மோகன் (47), ராஜேஷ் (52), முருகன் (48), குப்புசாமி (58), விஜயகாந்த் (44), அரவிந்த் (40) மற்றும் கடலூரைச் சேர்ந்த நாராயணன் (57) ஆகியோர் அடங்குவர்.
முரசு புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஆந்திர மாநிலம் நிஜாம்பட்டினம் துறைமுகத்தில் தங்களது படகை பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர். பின்னர் நவம்பர் 2ஆம் தேதி ராமாயப்பட்டினம் துறைமுகம் நோக்கிப் புறப்பட்டபோது, படகின் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மற்றொரு படகிற்கு வாக்கி டாக்கி மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் அவர்களிடமிருந்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து தகவலறிந்த இந்திய கடலோரக் காவல் படையினர் ஹெலிகாப்டர் மூலம் கடந்த இரண்டு நாட்களாகத் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் கோத்தப்பட்டினம் கடற்கரைப் பகுதியில் 9 மீனவர்களின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் ஆந்திராவுக்கு விரைந்துள்ளனர். இச்சம்பவம் காசிமேடு மீனவக் குடும்பங்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
