நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் – முதல்வர் விஜய் மீண்டும் வலியுறுத்தல்!
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் (NEET) மற்றும் உயர்கல்வி சேர்க்கைக்கான இதர நுழைவுத் தேர்வுகளை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜோசப் விஜய் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
தேர்வு சீர்திருத்தங்கள் தொடர்பாக மத்திய அரசு அமைத்துள்ள உயர்மட்டக் குழுவின் தலைவர் நந்தன் நிலேகனி, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜயை சந்தித்துப் பேசினார். இந்தக் கூட்டத்தில் ஐஐடி சென்னை இயக்குநர் வி. காமகோடி, முன்னாள் மத்திய கல்வித்துறை செயலாளர் அனிதா கர்வால் உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
அப்போது, தமிழக அரசின் சார்பில் நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும், மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விப் படிப்புகளுக்குப் பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
மேலும், கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையும் முதல்வர் சுட்டிக்காட்டினார்.
தேர்வு முறைகளில் பாதுகாப்பு, வெளிப்படைத்தன்மை, மாணவர்களின் நலன் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆய்வு செய்து வரும் மத்தியக் குழுவிடம் தமிழக அரசின் நிலைப்பாடு தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு, பள்ளிப் பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
