இலவச வேட்டி, சேலை தயாரிக்கும் நெசவாளர்களுக்கு குட் நியூஸ்! கூலியை உயர்த்திய தமிழக அரசு!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலைகளைத் தயாரிக்கும் நெசவாளர்களுக்கு கூலியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வளவு கூலி உயர்வு?
2027ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்காகப் புதிய வடிவமைப்புகளில் வேட்டி, சேலைகள் தயாரிக்கப்படுகின்றன. இதற்கான உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளதால், நெசவாளர்களின் கோரிக்கையைப் பரிசீலித்து அரசு கூலியை உயர்த்தியுள்ளது.
அதன்படி, விசைத்தறியில் தயாரிக்கப்படும் ஒரு சேலைக்கான மொத்தக் கூலி ரூ.54.81 ஆகவும், ஒரு வேட்டிக்கான மொத்தக் கூலி ரூ.23.34 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பெடல் தறியில் தயாரிக்கப்படும் ஒரு சேலைக்கு ரூ.125.72 ஆகவும், ஒரு வேட்டிக்கு ரூ.49.99 ஆகவும் கூலி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக ரூ.13.66 கோடி ஒதுக்கீடு!
இந்தக் கூலி உயர்வைச் செயல்படுத்துவதற்காக தமிழக அரசு கூடுதலாக ரூ.13.66 கோடி செலவிட அனுமதி அளித்துள்ளது. ஏற்கெனவே பொங்கல் வேட்டி, சேலை உற்பத்திக்காக ரூ.300 கோடி முன்பணமாக ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏன் இந்தக் கூலி உயர்வு?
நூல் விலை, மின்சாரக் கட்டணம், தொழிலாளர்களின் ஊதியம் மற்றும் தறிகளுக்கான உதிரிப் பாகங்களின் விலை உள்ளிட்ட செலவுகள் அதிகரித்துள்ளதாக நெசவாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். மேலும், புதிய வடிவமைப்புகளில் வேட்டி, சேலைகள் தயாரிப்பதற்கான உற்பத்திச் செலவுகளையும் கருத்தில் கொண்டு கூலியை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து, நெசவாளர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்த குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு முன்பாகப் பயனாளிகளுக்கு இலவச வேட்டி, சேலைகளை வழங்குவதுடன், அவற்றைத் தயாரிக்கும் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் நோக்கில் இந்தக் கூலி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
