அரபிக்கடலில் ரூ.3,000 கோடி போத*ப்பொருள்.. சிக்கிய 5 பாகிஸ்தானியர்கள்!
அரபிக்கடலில் ஈரான் நாட்டைச் சேர்ந்த படகில் இருந்து சுமார் 526 கிலோ போத*ப்பொருட்களை இந்திய கடலோர காவல்படை பறிமுதல் செய்துள்ளது. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரூ.3,000 கோடிக்கும் அதிகம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவு (ATS) மற்றும் இந்திய கடலோர காவல்படை இணைந்து மேற்கொண்ட உளவுத்துறை அடிப்படையிலான நடவடிக்கையில் இந்தப் பறிமுதல் நடைபெற்றுள்ளது. அரபிக்கடலில் லட்சத்தீவு பகுதிக்கு மேற்கே சந்தேகத்திற்கிடமாகச் சென்ற ஈரான் நாட்டைச் சேர்ந்த படகை கடல் மற்றும் வான்வழி கண்காணிப்பு மூலம் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி படகை விரட்டிச் சென்று தடுத்து நிறுத்திய கடலோர காவல்படை அதிகாரிகள், அதில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஹெராயின் மற்றும் மெத்தாம்பெட்டமைன் உள்ளிட்ட போத*ப்பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்தப் படகில் இருந்த 5 பாகிஸ்தான் நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட போத*ப்பொருட்கள், படகு மற்றும் கைது செய்யப்பட்டவர்கள் பாதுகாப்புடன் மும்பைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கு பல்வேறு விசாரணை அமைப்புகள் இணைந்து விசாரணை நடத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த போத*ப்பொருட்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன, எங்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது, இதன் பின்னணியில் செயல்பட்டதாகக் கூறப்படும் சர்வதேச கடத்தல் வலையமைப்பு யார் என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
