செய்திகள்

“ஜாதக தோஷம் சரிசெய்வதாக கூறி அத்துமீறல்!” – 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சாமியார் கைது

“ஜாதக தோஷம் சரிசெய்வதாக கூறி அத்துமீறல்!” – 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சாமியார் கைது

மகாராஷ்டிராவின் லாத்தூர் மாவட்டத்தில், ஜாதகத்தில் தோஷம் இருப்பதாகவும், சிறப்பு பூஜை செய்தால் அதை சரிசெய்யலாம் என்றும் கூறி 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சாமியார் ஒருவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சிறுமியின் பெற்றோர், அவரது ஜாதகத்தைப் பார்ப்பதற்காக ரமேஷ்வர் ராம்தாசி மகாராஜ் என்பவரை அணுகியதாக கூறப்படுகிறது. அப்போது சிறுமியின் ஜாதகத்தில் பிரச்சனை இருப்பதாகவும், அதற்காக சிறப்பு பூஜை நடத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்ததாக போலீஸ் புகாரில் கூறப்பட்டுள்ளது.

பூஜைக்காக சிறுமியின் வீட்டுக்குச் சென்ற அவர், பெற்றோரை அறைக்கு வெளியே இருக்கச் சொல்லிவிட்டு, சிறுமியிடம் தனியாக இருந்ததாகவும் போலீசில் அளிக்கப்பட்ட புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் ஜாதக தோஷத்தை நீக்குவதற்கான ஒரே வழி எனக் கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு உள்ளது.

மேலும், இதுகுறித்து யாரிடமும் கூறக்கூடாது என்றும் சிறுமியை அவர் மிரட்டியதாக புகாரில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமி கர்ப்பமான நிலையில், நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் அடிப்படையில் போலீசார் POCSO சட்டம், BNS மற்றும் மகாராஷ்டிரா மூடநம்பிக்கை மற்றும் சூனிய தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சாமியாரை கைது செய்துள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு 4 நாட்கள் போலீஸ் காவல் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *