செய்திகள்

உலகத்தரத்தில் சென்னை ஏர்போர்ட்! தனியார் நிர்வாகத்திற்கு மாறுகிறதா?

உலகத்தரத்தில் சென்னை ஏர்போர்ட்! தனியார் நிர்வாகத்திற்கு மாறுகிறதா?

சென்னை சர்வதேச விமான நிலையத்தை உலகத்தரத்திற்கு மேம்படுத்தும் நோக்கில், அதன் நிர்வாகம் மற்றும் பராமரிப்புப் பணிகளைத் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.

தற்போது சென்னை விமான நிலையத்தை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (AAI) நிர்வகித்து வருகிறது. இந்நிலையில், விமான நிலையத்தின் அன்றாட செயல்பாடுகள், பராமரிப்பு மற்றும் அடுத்தகட்ட வளர்ச்சிப் பணிகளைப் பொது-தனியார் பங்களிப்பு (PPP) முறையின் கீழ் நீண்டகால குத்தகைக்கு வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

டெல்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களின் விமான நிலையங்கள் ஏற்கெனவே தனியார் நிறுவனங்களின் நிர்வாகத்தில் செயல்பட்டு வரும் நிலையில், சென்னை விமான நிலையத்திலும் இதேபோன்ற மாற்றத்தைக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது.

முதலமைச்சர் விஜய் எழுதிய கடிதம்!

தமிழக முதலமைச்சர் விஜய், கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதில், தமிழ்நாட்டின் தொழில் முதலீட்டு வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் சென்னை விமான நிலையத்தின் உள்கட்டமைப்பு, பயணிகள் வசதிகள், விமானப் போக்குவரத்து மற்றும் சரக்குக் கையாளும் திறனை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தார். தற்போதைய நிர்வாகத்துக்குப் பதிலாகத் தகுதியான புதிய நிறுவனத்தை நியமிக்கவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆண்டுக்கு 3.5 கோடி பயணிகள்!

2025–26 நிதியாண்டில் சென்னை விமான நிலையம் சுமார் 2.30 கோடி பயணிகளைக் கையாண்டுள்ளது. புதிய முனையங்களின் விரிவாக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் ஆண்டுக்கு 3.5 கோடி பயணிகளைக் கையாளும் திறனை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின்படி, தினசரி செயல்பாடுகள், வணிக வளாகங்கள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பொறுப்புகள் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படலாம். அதேசமயம், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு தொடர்பான முக்கியப் பொறுப்புகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்துடன் கொல்கத்தா விமான நிலையத்தையும் இதே முறையில் தனியார் நிர்வாகத்தின்கீழ் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது.