செய்திகள்

ஆந்திராவில் புயலால் ரூ.500 கோடி மின் கட்டமைப்பு சேதம்! சீரமைப்புப் பணியில் 1,700 ஊழியர்கள்!

ஆந்திராவில் புயலால் ரூ.500 கோடி மின் கட்டமைப்பு சேதம்! சீரமைப்புப் பணியில் 1,700 ஊழியர்கள்!

ஆந்திரப் பிரதேசத்தில் கரையைக் கடந்த ‘அர்னாப்’ புயலால் மாநிலத்தின் மின்சாரக் கட்டமைப்புக்கு சுமார் ரூ.500 கோடி சேதம் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில மின்துறை அமைச்சர் கொட்டிபட்டி ரவி குமார் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 29ஆம் தேதி மேற்கு கோதாவரி மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்த அவர், மின்சாரக் கட்டமைப்பில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்துப் பேசினார். குறிப்பாக, மேற்கு கோதாவரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 3,700 மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதாகத் தெரிவித்தார்.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரத்தை மீண்டும் வழங்குவதற்காக சுமார் 1,700 மின்துறை ஊழியர்கள் ஏற்கெனவே பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், மாநிலத்தின் மூன்று மின்பகிர்மான நிறுவனங்களிலிருந்து கூடுதலாக 500 ஊழியர்கள் வரவழைக்கப்படுகின்றனர். தெலங்கானாவிலிருந்தும் 500 மின்துறை பணியாளர்கள் சீரமைப்புப் பணியில் இணைந்துள்ளனர்.

மாநிலத்தின் சுமார் 400 கிராமங்களில் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சேதமடைந்த மின்கம்பங்கள், மின்மாற்றிகள் மற்றும் மின்கம்பிகளைச் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் மின்சார விநியோகத்தைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். இதற்காகத் தேவையான உபகரணங்களும் பணியாளர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.