செய்திகள்

ஒடிசாவில் புயல் பாதிப்பு: 59 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்!

ஒடிசாவில் புயல் பாதிப்பு: 59 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்!

ஒடிசா மாநிலத்தில் ‘அர்னாப்’ புயல் காரணமாக ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, ஒன்பது மாவட்டங்களில் இருந்து 59,028 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகளுக்காக 300-க்கும் மேற்பட்ட பேரிடர் மீட்புக் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன.

அக்டோபர் 29ஆம் தேதி நடைபெற்ற மீட்பு நடவடிக்கைகளில், தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) 9 குழுக்கள், ஒடிசா பேரிடர் விரைவு நடவடிக்கைப் படையின் (ODRAF) 60 குழுக்கள் மற்றும் தீயணைப்புத் துறையின் 244 குழுக்கள் என மொத்தம் 313 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட கஞ்சம் மாவட்டத்தில் மட்டும் 11,882 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டவர்களில் 3,001 கர்ப்பிணிப் பெண்களும் அடங்குவர்.

கஞ்சம் மாவட்டத்தில் சுமார் 300 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 70 கிராமங்கள் வெளிப்புறத் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், அங்கு சிக்கியுள்ள மக்களை மீட்க இந்தியக் கடலோரக் காவல்படையின் ஹெலிகாப்டரும் பயன்படுத்தப்படுகிறது.

மேலும், வெள்ளப்பெருக்கால் ரயில் பாதைகள் பாதிக்கப்பட்டதால் 36 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சுமார் 30 ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன. தேசிய நெடுஞ்சாலை 16-லும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதுடன், மின்சாரம் மற்றும் போக்குவரத்து சேவைகளைச் சீரமைக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.