“இது நம்ம மஹிந்திரா ஆட்டோதான்!” லண்டன் வீடியோவைப் பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா!
இந்தியாவின் சாலைகளில் அன்றாடம் பார்க்கக்கூடிய ஆட்டோ ரிக்ஷா, லண்டன் சாலையில் சென்றால் எப்படி இருக்கும்? அப்படியொரு வித்தியாசமான காட்சிதான் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. லண்டனின் பரபரப்பான சாலையில் இந்தியத் தயாரிப்பு மஹிந்திரா ஆட்டோ ரிக்ஷா செல்லும் வீடியோவை, மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சுமார் 24 விநாடிகள் கொண்ட இந்த வீடியோவில், கருப்பு நிற மஹிந்திரா ஆட்டோ ரிக்ஷா லண்டனின் சாலையில் மற்ற வாகனங்களுக்கு இடையே பயணிப்பதைக் காண முடிகிறது. அதன் அருகே லண்டனுக்கே உரிய கருப்பு நிற டாக்ஸிகளும், சாலையில் நடந்து செல்லும் மக்களும் இருப்பது இந்தக் காட்சியை மேலும் சுவாரஸ்யமாக்கியுள்ளது.
இந்த வீடியோவை அக்டோபர் 5ஆம் தேதி தனது எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா, குஜராத்தி மொழியில், “UK ma riksha aavi gai chhe… Mahindra ni chhe, aapda” என்று குறிப்பிட்டிருந்தார். இதன் பொருள், “இங்கிலாந்துக்கு ஆட்டோ வந்துவிட்டது… மஹிந்திராவுடையது, நம்முடையது” என்பதாகும். மேலும், இந்த ஆட்டோவை ஒரு பொழுதுபோக்கு ஆர்வலர் பிரிட்டனுக்கு இறக்குமதி செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘ரிவர்ஸ் காலனிசேஷன்’ எனக் கூறும் நெட்டிசன்கள்!
இந்தியாவில் மிகவும் சாதாரணமாகக் காணப்படும் ஆட்டோ ரிக்ஷா, பிரிட்டனின் தலைநகரமான லண்டனில் பயணிப்பதைப் பார்த்த இணையவாசிகள் பலரும் சுவாரஸ்யமான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
சிலர் இதை நகைச்சுவையாக “ரிவர்ஸ் காலனிசேஷன்” (Reverse Colonisation) என்று குறிப்பிட்டுள்ளனர். பிரிட்டிஷ் ஆட்சியின் வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு, இந்தியாவுடன் தொடர்புடைய ஒரு வாகனம் பிரிட்டன் சாலைகளில் பயணிப்பதை நகைச்சுவையாகச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், இந்திய ஆட்டோக்களில் வழக்கமாக எழுதப்படும் வாசகங்கள், கட்டணப் பேச்சுவார்த்தைகள், போக்குவரத்து நெரிசலில் ஆட்டோ ஓட்டும் அனுபவம் போன்றவற்றையும் நினைவுகூர்ந்து பலர் நகைச்சுவையான கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர்.
இந்தியாவில் அன்றாடப் போக்குவரத்தின் ஓர் அங்கமாக இருக்கும் ஆட்டோ ரிக்ஷா, வெளிநாட்டுச் சூழலில் வித்தியாசமான காட்சியாக மாறியிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஒரு சிறிய வீடியோவின் மூலம் இந்திய வாகனத் தயாரிப்பும் ஆட்டோ கலாசாரமும் சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது.
