NEET ‘காகிதம் TO கணினி’.. அடுத்த ஆண்டு முதல் ஆன்லைன் தேர்வா?
நீட் தேர்வை காகிதம் மற்றும் பேனா முறையில் நடத்துவதற்குப் பதிலாக, கணினி வழியில் நடத்துவதற்கான பணிகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான நாடு முழுவதும் தேர்வு மையங்களின் கணினி வசதிகளை மேம்படுத்தும் பணிகளும் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு தற்போது OMR தாளில் காகிதம்–பேனா முறையில் நடைபெற்று வருகிறது. 2026-ம் ஆண்டு தேர்வில் 22.79 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்க திட்டமிடப்பட்டிருந்ததால், நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான தேர்வு மையங்கள் பயன்படுத்தப்பட்டன.
இந்த நிலையில், தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கணினி அடிப்படையிலான தேர்வை நடத்துவதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து அரசு ஆய்வு செய்து வருகிறது. இதற்காக அரசு கல்வி நிறுவனங்களில் உள்ள கணினி வசதிகள் மற்றும் தேர்வு நடத்துவதற்கான இடங்கள் குறித்த தகவல்களும் சேகரிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2026-ம் ஆண்டு மே மாதம், நீட் தேர்வு வினாத்தாள் தொடர்பான முறைகேடு குற்றச்சாட்டு குறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே, நீட் தேர்வை கணினி வழியில் நடத்துவது குறித்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. தேர்வு முறையை மாற்றுவது குறித்து நிபுணர் குழுவின் பரிந்துரைகள் மற்றும் பல்வேறு தரப்பினரின் ஆலோசனைகளின் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், NEET-ல் OMR தாளுக்கு பதிலாக கணினி திரை.. தேர்வு முறையில் பெரிய மாற்றம் வருமா? என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.
