செய்திகள்

550 ஆண்டுகள் பழமையான இயற்கை அதிசயம் கடலில் சரிந்தது.. சுற்றுலா பயணிகள் சோகம்!

550 ஆண்டுகள் பழமையான இயற்கை அதிசயம் கடலில் சரிந்தது.. சுற்றுலா பயணிகள் சோகம்!

அமெரிக்காவின் ஹவாய் தீவில் 500 ஆண்டுகளுக்கும் மேலாக கம்பீரமாக காட்சியளித்த பிரபலமான ஹோலெய் சீ ஆர்ச் (Hōlei Sea Arch) என்ற இயற்கை பாறை வளைவு தற்போது கடலில் சரிந்து காணாமல் போயுள்ளது. இந்த சம்பவம் சுற்றுலா பயணிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹவாய் தீவின் தெற்கு பகுதியில் உள்ள ஹவாய் வால்கனோஸ் தேசிய பூங்காவில் அமைந்திருந்த இந்த பாறை வளைவு, சுமார் 90 அடி (27 மீட்டர்) உயரம் கொண்டதாக இருந்தது. 550 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பழமையான எரிமலைக் குழம்பு பாறைகளில் கடல் அலைகளின் தொடர்ச்சியான அரிப்பால் இந்த இயற்கை வளைவு உருவானது.

கடந்த செப்டம்பர் 23-ம் தேதி வரை ஹோலெய் சீ ஆர்ச் கம்பீரமாக இருந்துள்ளது. ஆனால் செப்டம்பர் 27-ம் தேதி இரவுக்குள் அது முழுமையாக கடலில் சரிந்துவிட்டதாக அமெரிக்க தேசிய பூங்கா சேவை தெரிவித்துள்ளது. அது சரிந்த சரியான நேரம் இன்னும் தெரியவில்லை.

இந்தப் பகுதியில் பல ஆண்டுகளாக பாறை அமைப்புகளில் நிலையற்ற தன்மை காணப்பட்டு வந்தது. 2018-ம் ஆண்டு கிலாவியா எரிமலை வெடிப்பு மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நில அதிர்வுகள் அருகிலுள்ள பாறைகளை பலவீனப்படுத்தின. 2020-ம் ஆண்டில் ஏற்பட்ட கடுமையான கடல் அலைகளாலும் சீ ஆர்ச்சின் ஒரு பகுதி சேதமடைந்தது.

சமீபத்தில் ஏற்பட்ட டிராபிக்கல் புயல் நொலோவின்போது பூங்காவின் சில பகுதிகள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன. அந்த காலகட்டத்திலேயே சீ ஆர்ச் சரிந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், புயலே நேரடியாக சரிவுக்கு காரணமா என்பது உறுதி செய்யப்படவில்லை.

இயற்கையாக உருவான கடல் வளைவுகள் நிரந்தரமானவை அல்ல என்றும், கடல் அலைகளின் தொடர்ச்சியான அரிப்பு காரணமாக காலப்போக்கில் அவை சரிந்து விடுவது இயல்பான புவியியல் மாற்றம் என்றும் தேசிய பூங்கா சேவை விளக்குகிறது.

பல ஆண்டுகளாக சுற்றுலா பயணிகளின் முக்கிய பார்வையிடமாக இருந்த இந்த இயற்கை அதிசயம் தற்போது இல்லாமல் போனது, அங்கு சென்ற சுற்றுலா பயணிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, சீ ஆர்ச் இருந்த பகுதியைச் சுற்றியுள்ள கடற்கரை பாறைகள் நிலையற்ற நிலையில் இருப்பதால், மூடப்பட்ட பகுதிகளுக்குள் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *