முதல்வர் விஜயின் கவனம் முழுவதும் நாற்காலியை காப்பாற்றுவதில்தான்”.. ஸ்டாலின் கடும் விமர்சனம்!
தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் குற்றச் சம்பவங்களை சுட்டிக்காட்டி, தமிழக அரசையும் முதலமைச்சர் விஜயையும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். பொதுமக்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டிய முதலமைச்சரின் கவனம், தனது பதவியை காப்பாற்றுவதிலேயே இருப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் 19 வயது இளைஞர் சத்தியசீலன் கொலை செய்யப்பட்ட சம்பவம், திருத்தணியில் மகளுக்கு தொல்லை கொடுத்தவர் மீது புகார் அளித்த தந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம், சேலத்தில் மூதாட்டி கொலை செய்யப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களை தனது அறிக்கையில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு திரும்பிய வீரபத்திரன் என்பவர் தனது மனைவி கண் முன்னே கொலை செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் குற்றச் சம்பவங்கள் நடைபெற்று வருவதாக சுட்டிக்காட்டியுள்ள ஸ்டாலின், மக்கள் வீடுகளிலும் வெளியிலும் பாதுகாப்பற்ற சூழலை எதிர்கொள்வதாக கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும், போலீஸ் துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் “சூட்டிங்” மோடில் இருந்து வெளியே வந்து, மக்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
இந்த விமர்சனங்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது கவனம் பெற்றுள்ளன.
