செய்திகள்

ரூ.600 கோடி சொத்து.. ரூ.30 கோடி விடுபட்டது தேர்தல் வெற்றியை பாதிக்குமா? விஜய் வழக்கில் ஐகோர்ட் கேள்வி!

தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜயின் பெரம்பூர் தொகுதி தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விஜய் தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் சொத்து விவரங்களை முறையாக தெரிவிக்கவில்லை என்றும், சுமார் ரூ.30 கோடி மதிப்பிலான சொத்து விடுபட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் விஜய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் பெரும்பாலான சொத்து மற்றும் வருமான விவரங்கள் முறையாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், சில சிறிய அளவிலான தவறுகள் இருந்தால் மட்டும் தேர்தல் வெற்றியை செல்லாது என அறிவிக்க முடியாது என்றும் வாதிட்டனர். மேலும், வேட்புமனுவில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தேர்தல் முடிவை எந்த வகையிலும் பாதித்ததாக மனுதாரர் தரப்பில் நிரூபிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முக்கியமான கேள்விகளை எழுப்பினார். சுமார் ரூ.600 கோடி மதிப்பிலான சொத்துகளை ஏற்கனவே வெளிப்படையாக குறிப்பிட்டுள்ள நிலையில், அதில் ரூ.30 கோடி மதிப்பிலான சொத்து விடுபட்டிருப்பது மட்டும் ஒரு வாக்காளரின் முடிவை மாற்றக்கூடிய விஷயமா? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது

மேலும், இவ்வளவு பெரிய அளவிலான சொத்து விவரங்களை வேட்பாளர் நேரடியாக தயாரிப்பாரா அல்லது ஆடிட்டர் மற்றும் நிபுணர்களின் உதவியுடன் தயாரிப்பாரா என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். ஆடிட்டர் தரப்பில் ஏதேனும் தவறு ஏற்பட்டிருந்தால், அதற்காக மட்டும் தேர்தல் வெற்றியை ரத்து செய்ய முடியுமா என்ற கோணத்திலும் நீதிமன்றம் விசாரணை நடத்தியது.

விஜயின் தேர்தல் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தொடரப்பட்ட இந்த வழக்கில், மனுதாரர் தரப்பு வாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த வழக்கில் நீதிமன்றத்தின் இறுதி முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *