செய்திகள்

காவல் நிலையங்களுக்கு ரூ.71 கோடி நிதி! முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு!

காவல் நிலையங்களுக்கு ரூ.71 கோடி நிதி! முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களின் அன்றாடச் செலவுகளைச் சமாளிப்பதற்காக, அவற்றுக்கு வழங்கப்படும் மாதாந்திர நிதியைப் பல மடங்கு உயர்த்தி முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதற்காக ஆண்டுக்கு ரூ.71.01 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

காவல் நிலையங்களில் சட்டம் ஒழுங்கைப் பராமரித்தல், குற்றங்களைத் தடுப்பது, குற்றவாளிகளைக் கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்குத் தேவையான எழுதுபொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கான செலவுகளும் அதிகரித்து வருகின்றன.

இதைக் கருத்தில் கொண்டு, காவல் நிலையங்களின் அன்றாட நிர்வாக மற்றும் செயல்பாட்டுச் செலவுகளுக்காக வழங்கப்படும் எதிர்பாராச் செலவு நிதியை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.

எந்தக் காவல் நிலையத்திற்கு எவ்வளவு நிதி?

புதிய அறிவிப்பின்படி, சிறிய காவல் நிலையங்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்த ரூ.3,750, தற்போது ரூ.30,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நடுத்தரக் காவல் நிலையங்களுக்கு வழங்கப்பட்ட ரூ.6,000, ரூ.40,000 ஆகவும், பெரிய காவல் நிலையங்களுக்கு வழங்கப்பட்ட ரூ.8,250, ரூ.50,000 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த உயர்வின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான நிதி வசதி மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லஞ்சம், ஊழலைத் தடுக்க நடவடிக்கை!

காவல் நிலையங்களின் வழக்கமான செலவுகளுக்குப் போதுமான நிதி கிடைக்காததால், பொதுமக்களிடம் பணம் பெறும் முறையற்ற நடைமுறைகள் ஏற்படுவதைத் தடுப்பதும் இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும். அரசு நிதி மூலம் அத்தியாவசியச் செலவுகளை மேற்கொள்வதால், அதிகாரப்பூர்வமற்ற நிதி ஆதாரங்களைச் சார்ந்திருப்பது குறையும் என அரசு தெரிவித்துள்ளது.

முதலமைச்சர் விஜய், 2026–27ஆம் ஆண்டுக்கான காவல்துறை மானியக் கோரிக்கையின்போது அறிவித்ததன் அடிப்படையில் இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.