மதுராந்தகத்தில் விஜய் பிரசாரம்.. QR Pass இருந்தால் மட்டுமே அனுமதி!
மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றி கழகத் தலைவருமான விஜய் இன்று மதுராந்தகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து நடைபெறும் பொதுக்கூட்டம், மதுராந்தகம் ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட மேடையில் இன்று மாலை 3 மணியளவில் நடைபெறுகிறது.
முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விஜய் பங்கேற்கும் முதல் தேர்தல் பிரசாரம் என்பதால், தவெக தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆட்சி தொடர்பாக எதிர்க்கட்சிகள் முன்வைத்து வரும் விமர்சனங்களுக்கு விஜய் தனது பிரசாரத்தில் பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுக்கூட்டத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. QR குறியீடு கொண்ட அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டவர்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்க முடியும் என தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
காவல்துறை அனுமதி மற்றும் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அனுமதிச் சீட்டு இல்லாத கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், பள்ளி மாணவர்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடல்நலக் குறைபாடு உள்ளவர்களுக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக QR அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை. அவர்கள் நிகழ்ச்சிக்கு வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனுமதிச் சீட்டு பெற்றவர்களுக்காக குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அடிப்படை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நிகழ்ச்சியை தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதள நேரலை வாயிலாக பார்வையிடுமாறு தவெக சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
