என் தம்பிங்க விஜய் …!என ட்விஸ்ட் கொடுத்த கனிமொழி!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், தாராபுரத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டார்.
மதுராந்தகத்தில் பிரச்சாரம் செய்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தனது ‘ஸ்வீட் அங்கிள்’ என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் கனிமொழி தனது பிரச்சாரத்தில் விஜய்யை குறிப்பிட்டு பேசியுள்ளார்.
தாராபுரம் பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி, அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்ததால் சத்யபாமா தற்போது ‘தங்கை சத்யபாமா’ ஆகிவிட்டதாகக் கூறினார். தொடர்ந்து, விஜய் தனது அண்ணன் ஸ்டாலினை ‘ஸ்வீட் அங்கிள்’ என்று அழைப்பதால், விஜய் இனி தங்களுக்கு சொந்தக்காரர் என்றும், அவரை ‘அன்புத் தம்பி விஜய்’ என்று அழைப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், விஜய் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பல்வேறு மாற்றங்களை கொண்டு வருவதாக கூறியதாகக் குறிப்பிட்ட கனிமொழி, தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் கேள்வி எழுப்பினார். மின்வெட்டு, சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாகவும் அவர் விமர்சனங்களை முன்வைத்தார்.
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் உள்ளிட்ட தொகுதிகளில் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.
