தமிழக மங்கை சாதனை.. ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்ற வித்யா ராம்ராஜ்!
ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டு போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த இந்திய தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் மகளிர் 400 மீட்டர் தடைதாண்டி ஓட்டப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இறுதிப்போட்டியில் வித்யா ராம்ராஜ் 54.75 விநாடிகளில் இலக்கை கடந்தார். இது அவரது புதிய தனிப்பட்ட சாதனையாக மட்டுமின்றி, இந்திய அளவிலான புதிய தேசிய சாதனையாகவும் அமைந்துள்ளது.
42 ஆண்டுகால சாதனை முறியடிப்பு
வித்யா ராம்ராஜின் இந்த ஓட்டத்தின் மூலம் இந்திய தடகளத்தின் முக்கியமான நீண்டகால சாதனை ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் இந்திய தடகள வீராங்கனை பி.டி. உஷா, 1984-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் 400 மீட்டர் தடைதாண்டி ஓட்டத்தில் 55.42 விநாடிகளில் பதிவு செய்திருந்த தேசிய சாதனையே இதுவரை நீடித்து வந்தது.
இந்த நிலையில், 54.75 விநாடிகளில் இலக்கை கடந்த வித்யா ராம்ராஜ், பி.டி. உஷாவின் சாதனையை 0.67 விநாடிகள் வித்தியாசத்தில் முறியடித்துள்ளார்.
