செய்திகள்

IIT மெட்ராஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்க கோரிக்கை

IIT மெட்ராஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்க கோரிக்கை

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு IIT மெட்ராஸ் படிப்பில் விண்ணப்பிக்க காலக்கெடுவை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டிக்க உத்தரவிடக் கோரிய மனு

அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட நிலை அறிக்கையை ஏற்று வழக்கு முடித்து வைப்பு

திண்டுக்கல்லைச் சேர்ந்த வழக்கறிஞர் பர்வேஷ் முஷ்ரஃப் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், “தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் தகுதியான மாணவர்களுக்கு IIT மெட்ராஸ் வழங்கும் BS Degree படிப்பு குறித்த தகவல்கள் சென்றடைவதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். IIT மெட்ராஸ் கடந்த 2021-ஆம் ஆண்டு BS Degree in Data Science and Applications படிப்பை அறிமுகப்படுத்தியது, அனைவருக்கும் IIT மெட்ராஸ் என்ற “Anaivarukkum IITM” திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளி மற்றும் மாநகராட்சி பள்ளி மாணவர்களிடையே இந்தப் படிப்பை கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொண்டது.

இந்த முயற்சியின் தொடக்க கட்டத்தில் 58 அரசுப் பள்ளிகள் மற்றும் மாநகராட்சி பள்ளிகளைச் சேர்ந்த 192 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது, அவர்களில் 68 மாணவர்கள் நாடு முழுவதும் நடத்தப்படும் தகுதித் தேர்வில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து, 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 87 மாணவர்கள் IIT மெட்ராஸ் BS Degree படிப்பில் சேர்க்கை பெற்றனர்.

மேலும், 2023-ஆம் ஆண்டு முதல் கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களை STEM கல்வியுடன் இணைக்கும் வகையில் IIT மெட்ராஸ் மற்றும் பள்ளிக் கல்வித்துறை இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டது, இதன் மூலம் ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சம் அரசுப் பள்ளி மாணவர்களை சென்றடையும் திட்டம் செயலபடுத்தப்பட்டது.

ஒரு மாணவரை படிப்பு குறித்து அறிமுகப்படுத்துவது மட்டுமே போதுமானதல்ல; விண்ணப்பிக்கும் நடைமுறையை முழுமையாக நிறைவு செய்யும் வகையில் மாணவர்களுக்கு போதிய தகவல் மற்றும் உதவி வழங்கப்பட வேண்டும். தற்போது IIT மெட்ராஸ் இணையதளத்தில் செப்டம்பர் 2026 சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் நடைபெற்று வருகிறது, 27.09.2026 விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும். தகுதித் தேர்வு நவம்பர் 2026-ல் நடைபெற உள்ளது. விண்ணப்ப காலக்கெடு முடிந்த பின்னர் படிப்பு குறித்து அறியும் தகுதியான அரசுப் பள்ளி மாணவர்கள், மற்ற மாணவர்களைப் போலவே தகுதித் தேர்வு மூலம் தங்களது திறமையை நிரூபிக்கும் வாய்ப்பையே இழக்க நேரிடும்.

எனவே, IIT மெட்ராஸ் BS Degree படிப்புக்கான விண்ணப்ப காலக்கெடுவை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டிக்கவும், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு படிப்பு குறித்த தகவல், தகுதிகள், விண்ணப்ப நடைமுறை, கட்டணச் சலுகைகள் உள்ளிட்ட விவரங்களை பள்ளிக் கல்வித்துறை மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் கொண்டு சேர்க்க உத்தரவிட வேண்டும்.

மேலும், தகுதியான மாணவர்களை அடையாளம் கண்டு, விண்ணப்பிக்கும் நடைமுறையில் தேவையான உதவிகளை வழங்கவும், டிஜிட்டல் வசதி தேவைப்படும் மாணவர்களுக்கு உதவி செய்யவும் அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.” என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சி வி கார்த்திகேயன், ஆர் சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், போதிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *