செய்திகள்

3 பதக்கங்களுடன் கோவை திரும்பிய வித்யா ராம்ராஜ்.. உற்சாக வரவேற்பு அளித்த அமைச்சர்!

3 பதக்கங்களுடன் கோவை திரும்பிய வித்யா ராம்ராஜ்.. உற்சாக வரவேற்பு அளித்த அமைச்சர்!

ஜப்பானில் நடைபெற்ற 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கங்களை வென்று சாதனை படைத்த தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு கோவையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவையைச் சேர்ந்த வித்யா ராம்ராஜ், மகளிர் 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணியுடன் இணைந்து தங்கப் பதக்கம் வென்றார். இதற்கு முன்பு கலப்பு 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும், 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெண்கலப் பதக்கமும் வென்றிருந்தார். இதன் மூலம் நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் மொத்தம் 3 பதக்கங்களை அவர் கைப்பற்றியுள்ளார்.

மேலும், 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 54.75 வினாடிகளில் பந்தயத்தை நிறைவு செய்து, பி.டி. உஷா 1984-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் பதிவு செய்த 55.42 வினாடிகள் என்ற தேசிய சாதனையை முறியடித்தார். இந்தப் போட்டியில் அவர் வெண்கலப் பதக்கம் வென்றதுடன் புதிய தேசிய சாதனையையும் படைத்தார்.

ஜப்பானில் இருந்து சென்னை வந்தடைந்த பிறகு, வித்யா ராம்ராஜ் இன்று கோவை திரும்பினார். கோவை விமான நிலையத்தில் அவரது பெற்றோர், உறவினர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அமைச்சர் புஸ்ஸி ஆனந்தும் அவரை வரவேற்று பாராட்டினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வித்யா ராம்ராஜ், பி.டி. உஷாவின் நீண்டகால தேசிய சாதனையை முறியடித்தது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். இந்த சாதனையை அடைய மாநில அரசு மற்றும் விளையாட்டுத் துறையின் ஆதரவுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

மேலும், கடந்த போட்டியை விட இந்த முறை கடுமையாக பயிற்சி மேற்கொண்டதாகவும், 2023-ம் ஆண்டிலிருந்தே சாதனையை முறியடிக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வந்ததாகவும் கூறினார். பதக்கத்தை இலக்காகக் கொள்ளாமல், தனது நேரத்தை தொடர்ந்து மேம்படுத்துவதிலேயே கவனம் செலுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

தனது பயிற்சியாளரின் பங்களிப்பையும் குறிப்பிட்ட வித்யா ராம்ராஜ், ஒரு விளையாட்டு வீரரின் வெற்றிக்குப் பின்னால் பயிற்சியாளர்களின் உழைப்பும் முக்கியமானது எனக் கூறினார். விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் அங்கீகாரத்தைப் போலவே, அவர்களின் பயிற்சியாளர்களுக்கும் உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஒலிம்பிக் வாய்ப்பு குறித்து பேசிய அவர், இந்தியா இன்னும் உலக அளவில் கடுமையாக போட்டியிட வேண்டிய நிலையில் இருப்பதாகவும், தனது தற்போதைய சாதனையில் முழுமையான திருப்தி அடையவில்லை என்றும் தெரிவித்தார். இளம் விளையாட்டு வீரர்கள் தங்களது பெற்றோர் மற்றும் பயிற்சியாளர்களை நம்பி தொடர்ந்து தீவிரமாகப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *