தமிழக விளையாட்டு வீரர்களுக்கு ஜாக்பாட்! ‘Dream Olympics 2026’ திட்டம் அறிமுகம்!
தமிழக விளையாட்டுத் துறையில் புதிய முயற்சியாக, 2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் தமிழக வீரர்கள் பதக்கங்களை வெல்லும் நோக்கில் ‘Dream Olympics 2026’ திட்டத்தை முதலமைச்சர் விஜய் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் சாதனை படைத்த வீரர்களைப் பாராட்டும் நிகழ்வின்போது இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள இளம் விளையாட்டு வீரர்களைக் கண்டறிந்து, அவர்களுக்குத் தேவையான பயிற்சி மற்றும் நிதியுதவிகளை வழங்குவதன் மூலம் சர்வதேச அளவிலான போட்டிகளில் அவர்கள் சாதிக்க வழிவகுப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்தத் திட்டத்தின் கீழ், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு மாதம் ரூ.1 லட்சம் உதவித்தொகையும், பயிற்சிக்காக ஆண்டுக்கு ரூ.50 லட்சம் நிதியுதவியும் வழங்கப்பட உள்ளது.
மேலும், ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்லும் வீரர்களுக்கு ரூ.5 கோடியும், வெள்ளிப் பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.3 கோடியும், வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.2 கோடியும் பரிசுத் தொகையாக வழங்கும் ஊக்கத்திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, ஒலிம்பிக் தரத்திலான பயிற்சி மையங்கள், விளையாட்டு நகரம் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய பயிற்சி உள்கட்டமைப்புகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இளம் வயதிலேயே திறமையான வீரர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு நீண்டகாலப் பயிற்சி வழங்குவதிலும் அரசு கவனம் செலுத்துகிறது.
தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் சர்வதேசப் போட்டிகளில் அதிக பதக்கங்களை வெல்ல வேண்டும் என்ற இலக்குடன் தொடங்கப்பட்டுள்ள இந்த ‘Dream Olympics 2026’ திட்டம், மாநிலத்தின் விளையாட்டுத் துறையில் முக்கிய முன்னெடுப்பாகப் பார்க்கப்படுகிறது.
