பயில்வான் ரங்கநாதன் ரூ.1 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் – பிரபல நடிகரின் மகள் வழக்கு!
நடிகரும் பிரபல யூடியூப் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் மீது நஷ்டஈடு கேட்டு பிரபல நடிகர் மகள் வழக்கு தொடர்ந்துள்ளார்.
80களின் திரைப்படங்களில் குஸ்தி வாத்தியார், ரவுடி உள்ளிட்ட பலதரப்பட்ட படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்களை வைத்திருப்பவர் பயில்வான் ரங்கநாதன். சினிமாவில் பெரிய அளவுக்கு வாய்ப்பு இல்லாததால் யூடியூப் சேனல் ஆரம்பித்து சினிமா சார்ந்த கிசுகிசு உள்ளிட்டவற்றை பேசி வருகிறார். இதற்கு பல தரப்பிட்ட மக்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் மத்தியில் அவ்வபோது எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

இந்த நிலையில் தான் தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை கூறிய நடிகர் பயில்வான் ரங்கநாதனுக்கு எதிராக, ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி, திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளரும், நடிகர் சத்தியராஜின் மகளுமான திவ்யா சத்யராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இது தொடர்பாக திவ்யா சத்தியராஜ் அளித்த பேட்டி ஒன்றில், திருமணம் செய்து கொண்டதற்காக மட்டும் ஒரு ஜோடி சேர்ந்து வாழ்வதில்லை என்றும், மதம், ஜாதகம் அடிப்படையிலான திருமணங்களில் தனக்கு நம்பிக்கையில்லை என்று கூறியிருந்தார்.

இந்த பேட்டி தொடர்பாக, நடிகர் பயில்வான் ரங்கநாதன், தன்னை அவதூறாக விமர்சித்து யூடுயூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளதாகக் கூறி, ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி, திவ்யா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
மேலும், தன்னைப் பற்றி அவதூறு கருத்துகள் தெரிவிக்க பயில்வான் ரங்கநாதனுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், தனக்கு எதிரான அவதூறு கருத்துகளைத் தொடர்ந்து ஒளிபரப்ப கூகுள், பேஸ்புக், எக்ஸ் தளங்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி, திவ்யா சத்தியராஜுக்கு எதிராக கருத்துக்கள் தெரிவிக்க தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், திவ்யாவுக்கு எதிரான ஆட்சேபகரமான கருத்துக்களை யூடுயூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஒளிபரப்ப அனுமதிக்கக் கூடாது என கூகுள், பேஸ்புக் மற்றும் எக்ஸ் தளங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
