நீலகிரியில் பயங்கர நிலச்சரிவு! மண்ணில் புதைந்த அரசுப் பேருந்து; ஓட்டுநர் ப*
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் அரசுப் பேருந்து சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் உ*ரிழந்த நிலையில், நடத்துநர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.
ஊட்டியில் இருந்து கோவை நோக்கி அரசுப் பேருந்து ஒன்று நேற்று இரவு புறப்பட்டது. குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் உள்ள பர்லியார் பகுதியில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, சாலையில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, பேருந்தில் இருந்த பயணிகள் இறங்கிச் சென்றுள்ளனர். ஓட்டுநரும் நடத்துநரும் மட்டும் பேருந்தில் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்போது மலையிலிருந்து மரங்கள், பாறைகள் மற்றும் மண் சரிந்து பேருந்தின் மீது விழுந்ததில், வாகனம் முழுவதுமாக மண்ணில் புதைந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர், காவல்துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் தீவிரமாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் ஓட்டுநர் ஜனகராஜ் உ*ரிழந்தார். காயமடைந்த நடத்துநர் கேசவன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பேருந்தில் பயணித்தவர்கள் ஏற்கெனவே இறங்கிச் சென்றதால், பயணிகளுக்கு உ*ரிழப்பு ஏற்படவில்லை எனப் பின்னர் வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர் கனமழையால் குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட மலைப்பாதைகளில் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. மரங்கள் மற்றும் பாறைகள் சாலைகளில் விழுந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. ஊட்டி – மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவையும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
மழை மற்றும் நிலச்சரிவு அபாயம் காரணமாக அக்டோபர் 24 முதல் 26ஆம் தேதி வரை நீலகிரிக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதைத் தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
