தலைமைச் செயலக திட்டத்துக்கு எதிராக NGT-ஐ நாடிய வழக்கறிஞர்!
சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ள நிலையில், இந்தத் திட்டத்துக்கு எதிராக தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. பட்டினப்பாக்கம் கடலோரப் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதால் சுற்றுச்சூழல் மற்றும் கடலோரப் பகுதியின் பாதுகாப்பு தொடர்பான பாதிப்புகள் ஏற்படலாம் என மனுவில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே, பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்திலும் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் சுற்றுச்சூழல், போக்குவரத்து, மீனவர்களின் வாழ்வாதாரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
இதனிடையே, பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாக அரசு இறுதி முடிவு எதையும் எடுக்கவில்லை என தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் சமீபத்தில் தெரிவித்திருந்தார்
இந்த நிலையில், பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடரப்பட்டதாக கூறப்படும் வழக்கு மீதான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
